புதுடெல்லி: கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் அது குற்றமாகக் கருத வேண்டுமா என்பது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதில் கவனிக்கத்தக்க வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
18 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும்; கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, அதை இறுதியில் பார்ப்போம் என குறிப்பிட்டார்.
அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (All India Democratic Women’s Association) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி, பாலியல் செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, ஒருவர் தன் மனைவியிடம் பலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக நீதித் துறை அறிவித்தால் அது புதிய குற்றமாக உருவாக்குமா என்று கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து தனது வாதத்தை முன்வைத்த கருணா நண்டி, “பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிக்கிறது. பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, கணவனாக இருந்தாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான். ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்டம் கூறுகிறது. திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக உள்ளது.
பாலியல் வன்கொடுமையை பிஎன்எஸ் குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால், கணவன் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவரை முழுவதுமாக குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, இதனை அரசியலமைப்புக்கு ஏற்ப கொண்டு வர வேண்டும்.
இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக 1736-ல் இருந்த மேத்யூ ஹேலி, அளித்த தீர்ப்புதான் இன்றைக்கும் இந்த விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் தனது தீர்ப்பில், கணவன் – மனைவியை ஓர் உடல் என கருதினார். கணவன் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக இருக்க முடியாது என்றும் அவர் அளித்த தீர்ப்பு கூறுகிறது. பரஸ்பர திருமண சம்மதம் மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் மனைவி, கணவனுக்கு உரிமையை கொடுத்துள்ளார் என அதில் உள்ளது. எனனும், மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை 2003-ல் குற்றமாக இங்கிலாந்து மாற்றிவிட்டது” என குறிப்பிட்டார்.
மனைவியுடனான பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருதுவது திருமண உறவை பாதிக்கும் என மத்திய அரசு கூறி இருப்பதற்கு பதில் வாதத்தை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வாதிட்ட கருணா நண்டி, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது திருமணம் எனும் நிறுவனத்தை அழிக்காது என்றும், திருமணம் தனிப்பட்டது; நிறுவன ரீதியானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.