உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பு
ஜம்மு காஷ்மீர் 90 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் 1 இடத்திலும் வென்றன. அதேநேரத்தில் சட்டப்பிரிவு 370-யை நீங்கியதால் பெரும் ஆதரவுள்ளதாக கூறி வந்த பா.ஜ.க-வுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ-வும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கூட்டணியின் பலம் 54 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும், அக்கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர் குமார் சவுத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
மாநில அந்தஸ்து..
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து விரைவில் வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனால் யூனியன் பிரதேச அந்தஸ்துக்கு ஜம்மு காஷ்மீர் மாற்றப்பட்டது. இதனால் தீவிரவாதம் இல்லை, மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால் இதற்கு எதிரான வாதங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த சூழலில் தான் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உமர் அப்துல்லா, ‘பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்குச் சேவைசெய்ய எங்களுக்கு அதிகாரம் தேவை. எனவே மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்.
புறக்கணித்த காங்கிரஸ் உறுப்பினர்கள்..
யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில் துணைநிலை ஆளுநருக்குதான் சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் இருக்கின்றன. எனவேதான் விரைவில் முழு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என உமர் அப்துல்லா விரும்புகிறார். பிறகு சட்டப்பிரிவு 370-யை மீண்டும் அமல்படுத்துவதற்கான வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் உமர் அப்துல்லாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. இதன் பின்னணி குறித்து பேசும் அக்கட்சியின் சீனியர்கள், “காங்கிரஸ் சார்ப்பில் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டோம். அதற்கு ‘அமைச்சரவையில் ஓர் இடம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியும்’ என உமர் அப்துல்லா தெரிவித்துவிட்டார். ஜம்மு காஷ்மீரில் கிடைத்த வெற்றிக்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பிரசாரம் தான் முக்கிய காரணம். ஆனால் கடைசியில் எங்களுக்கு ஒரு இடம் தான் என சொல்லிவிட்டனர். எனவேதான் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை” என்றனர்.
உமர் அப்துல்லாவின் மூவ்
உமர் அப்துல்லாவின் மூவ் குறித்து பேசும் விவரப்புள்ளிகள், “உமர் அப்துல்லா அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை 1982 முதல் 2002 வரையில் முதலமைச்சராக பதவி வகித்தவர். தனது 28 வயதில் கடந்த 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானார். 1999-ம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார். வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சராக இருந்தார். 2001-ம் ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் மாநில தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பிறகு 2009-ல் முதல்வராக பொறுப்பேற்றார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். தற்போது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கிறார். இதையடுத்துதான் மக்களை கவரும் விதமாக மாநில அந்தஸ்துக்கு தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.