புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாராணசியில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.2,642 கோடி செலவில் இரட்டை அடுக்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் அடுக்கில் 4 ரயில் பாதைகளும், மேல் அடுக்கில் 6 வழி நெடுஞ்சாலையும் அமைக்கப்படவுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் வாராணசி மற்றும் சந்தாலி மாவட்டங்கள் வழியாக கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.2,642 கோடி செலவில் இரட்டை அடுக்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை பாலம் அமைக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
வாராணசியில் கங்கை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் இந்தப் பாலத்தின் கீழ் அடுக்கில் 4 ரயில் பாதைகள் அமைக்கப்படும். மேல் அடுக்கில் 6 வழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். பிரதமரின் கதி சக்தி தேசிய திட்டத்தின் கீழ் ரூ.2,642 கோடி செலவில் அமைக்கப்படும் இந்தப் பாலம், உலகின் மிகப் பெரிய பாலங்களில் ஒன்றாக இருக்கும். இங்குள்ள மால்வியா பாலம் 137 ஆண்டுகள் பழமையானது. இதனால் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரட்டை அடுக்கு பாலம் மூலம் வாராணசியில் போக்குவரத்து நெரிசல் குறையும். வாராணசி ரயில் நிலையத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இது சுற்றுலா தலமாக இருப்பதால், ரயில்வேக்கு இது முக்கியமான பகுதி. மேலும் நிலக்கரி, சிமென்ட், உணவு தானியங்கள் ஆகியவை வாராணசியில் உள்ள பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. சுற்றுலா மற்றும் தொழில் துறையினரின் தேவையை நிறைவேற்ற இங்கு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பாலம் மூலம் இப்பகுதியில் சமூக-பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாலம் அமைக்கப்பட்டதால், இதன் மூலம் ஆண்டுக்கு 2.78 கோடி டன் சரக்குகள் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த இணைப்பு திட்டம் தடையற்ற பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்தும். ரயில்வே போக்குவரத்து சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், இந்த திட்டம் பருவநிலை மாற்றஇலக்குகள் அடையவும் உதவும்.போக்குவரத்து செலவு குறைவதோடு, 149 கோடி கிலோ அளவுக்கு கார்பன் வெளியேற்றமும் குறைக்கப்படும். இது 6 கோடி மரங்களை நடுவதற்கு நிகரானது. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.