விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் .ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று, பாகநிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மாநில துணைப்பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடி பேசியது: “விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் தற்போது 4-ல் திமுகவைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏ-க்களாக உள்ளனர். வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
200 மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். தேர்தல் முடியும் வரை கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட தொகுதிப் பார்வையாளர்கள் இங்கிருந்து பணியாற்றுவார்கள். இம்மாதம் 29-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது பெயரை நீக்குவதுடன், புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளர் குறித்த விவரங்களை திமுகவினர் சரிபார்க்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் யார் நின்றாலும், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும். உட்கட்சிப் பூசல்,கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு முழு ஈடுபாட்டுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும். தேர்தலில் 90 சதவீத வாக்குகளை நாம்தான் பெற வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள்தான் சென்னை மக்களை மழைப் பாதிப்பிலிருந்து மீட்டிருக்கிறது. மழையை வைத்து அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சிகள் நினைத்தன.ஆனால், அதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நாம் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றினால் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். எனவே அதற்கேற்ற வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்றார்.