இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் `தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
`கோட்’ திரைப்படம் வெளியான சமயத்தில் `இத்திரைப்படத்தின் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்திருந்த ராஜதுரை படத்தின் கதையோடு ஒன்றி இருக்கிறது’ என சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது. இது பற்றிய தகவலை சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்து இயக்குநர் வெங்கட் பிரபுவே வெளிப்படையான பதில் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
அவர், ” எனக்கு கோட் படத்தோட ரிலீஸுக்குப் பிறகுதான் அது எஸ்.ஏ.சி சார் இயக்கின ராஜதுரை படத்தோட கதைனு தெரியும். அதுக்குப் பிறகு சமூக வலைதளங்கள்ல இதுபற்றி பார்த்ததும் இந்த படத்தை பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இதெல்லாம் தெரிஞ்சிருந்தால் முன்னாடியே பார்த்து இன்னும் பெட்டராக எடுத்திருப்பேன். அப்பா – பையன் பற்றிய கதைங்கிறது ஒரு யுனிவர்சல் லைன். நான் நிறைய படங்கள் பார்த்துதான் கோட் பண்ணினேன்.
ஆனால் ராஜதுரை படத்தை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரில. நான் சினிமா பார்த்துதான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்னு சொல்றதுக்கு இதுவும் ஒரு உதாரணம். சினிமா நமக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்!’ எனக் கூறினார்.
இதுமட்டுமல்ல சமீப நாள்களாக தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு மட்டும்தான் தன்னுடைய உதவி மற்றும் துணை இயக்குநர்களுக்கு மாத சம்பளத்தையும் தினசரி சம்பள பேட்டாவையும் வழங்கிய ஒரே இயக்குநர் என்ற விஷயமும் பேசப்பட்டு வருகிறது. உதவி இயக்குநராக பணியாற்றும்போது தினசரி சம்பளம் சரியாக கிடைக்காது என்ற தகவலே உதவி இயக்குநர்கள் பலர் சொல்லி கேட்டிருப்போம்.
ஆனால் இது உதவி இயக்குநர்களுக்கு சிரமத்தை உருவாக்கும் என்பதை எண்ணி அவருடைய உதவி இயக்குநர் அனைவருக்கும் தினசரி பேட்டா மற்றும் மாத சம்பளத்தை வழங்கியிருக்கிறாராம். வெங்கட் பிரபுவின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இவரின் சகோதரர் ப்ரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது பற்றிய பதிவு ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…