சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனிக்கு பிறகு ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்டர் இடத்தை பிடித்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதில் தனது திறமையை காட்டி வருகிறார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தி இருந்தார். அடுத்தடுத்த தொடர்களில் இவரது இடம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது அணியில் உறுதியான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தபடியாக டெஸ்ட் அணியில் எப்படியாவது இடம் பெற வேண்டும் என்பதற்காக ரஞ்சிக் கோப்பையில் கவனம் செலுத்த உள்ளார். வரும் போட்டிகளில் கேரளா அணிக்காக களமிறங்க உள்ளார் சஞ்சு சாம்சன். சாம்சன் 2011ம் ஆண்டு கேரளாவுக்காக முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். மொத்தமாக இதுவரை 61 ரஞ்சி டிராபி போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பங்களாதேஷ் தொடரில் இடம் பெற்றதால் ரஞ்சி கோப்பையின் தொடக்க ஆட்டத்தை சஞ்சு சாம்சன் தவற விட்டார். அடுத்ததாக இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளது. அதற்கு முன்பு சாம்சன் கேரளாவுக்காக இரண்டு ரஞ்சி போட்டிகளில் விளையாடலாம்.
வரும் அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறும் ரஞ்சி கோப்பை இரண்டாவது சுற்றில் கர்நாடகாவை கேரளா அணி எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனாக உள்ளார். பந்த் காயத்தில் இருந்த போது கேஎஸ் பாரத் விக்கெட் கீப்பராக இருந்தார். தற்போது ரிஷப் மீண்டும் களமிறங்கியதில் இருந்து துருவ் ஜூரல் பேக்கப் விக்கெட் கீப்பராக உள்ளார். இதனால் இஷான் கிஷன் மற்றும் சாம்சன் ஆகியோர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சாம்சன் ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை அடிக்கும் பட்சத்தில் சில தொடர்களில் அவரை பிசிசிஐ முயற்சி செய்து பார்க்கும்.
சஞ்சு சாம்சன் முதல் தர போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 16 அரை சதங்களுடன் 3819 ரன்கள் எடுத்துள்ளார். கேரளா மற்றும் கர்நாடகா இடையேயான ரஞ்சி டிராபி போட்டி நேரடி ஒளிபரப்பு இல்லாததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். டெல்லி – தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் – ராஜஸ்தான் மற்றும் குஜராத் – ஆந்திரா இடையேயான ரஞ்சி போட்டிகள் மற்றும் ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
டெஸ்ட் அணியில் இடம் பெற விரும்புகிறேன்: சஞ்சு சாம்சன்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சு சாம்சன், “டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறும் திறமை என்னிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன், என்னை நானே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கட்டுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம். இந்திய தேர்வு குழு என்னை அதிகம் ரெட் பாலில் விளையாட சொல்கின்றனர். அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி உள்ளேன். சூரியகுமார் யாதவ் ஒரு நல்ல கேப்டன், வீரர்களிடம் இருந்து என்ன பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கவுதம் கம்பீர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.