இந்தியாவில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள், இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெருவாரியான இடங்களில், டவர் அமைத்துதான் வழங்கப்பட்டு வருகிறது. வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழியாகவும் சேவைகள் வழங்கி வருகின்றன. பார்தி ஏர்டெல் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட், எஸ்.இ.எஸ்-ஜியோ இணைந்து நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆர்வம்காட்டி வருகின்றன. எனவே, இரு வகையான நிறுவனங்களுக்கு மத்தியில் வணிகப் போட்டி நடைப்பெறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த இரு வகையான தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சமமான வணிக சந்தையை ஏற்படுத்திக் கொடுக்க தீவிரம் காட்டிவருகிறது.
அதற்காக, செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவை வழங்குவதற்கான அகண்ட அலைவரிசையை, நிறுவனங்களுக்கு ஏலம் விடும் முறையில் வழங்காமல், ஒதுக்கீடு முறையில் வழங்கலாம் என TRAI மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
TRAI-யின் இந்தப் பரிந்துரைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, கடந்த வாரம் ஜியோ நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அதில், “அலைக்கற்றை விவகாரத்தில் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமற்ற நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும், “நகர்ப்புறங்களில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்க விரும்பும் செயற்கைக்கோள் வழி இணைய நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்களைப் போலவே, உரிமக் கட்டணம் செலுத்தச் செய்ய வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அனைத்தும் அவற்றுக்கும் பொருந்தும். அலைக்கற்றை உரிமத்தை, செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் விலை கொடுத்து வாங்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்கை பணம் செலுத்தி பெறச் செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஜியோ நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்வினையாற்றிய ‘ஸ்டார்லிங்க்’ தொலைத் தொடர்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ஏல நடைமுறையின் போது லாபி செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, தன் எக்ஸ் பக்கத்தில், “செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசைக்கு, ஏல நடைமுறையை அமல்படுத்த, இந்திய அரசுக்கு முகேஷ் அம்பானி அழுத்தம் அளித்துவருவது, இதுவரை எந்த வகையான நடைமுறையிலும் இல்லாதது. உலகளவில் செயற்கைக்கோள் வழி அகண்ட அலைவரிசை உரிமம் நிர்வாகரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுவதே நடைமுறை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு பெரும் நிறுவனங்களுக்கு மத்தியில் இருந்த புகைச்சல் இந்தப் பதிவுகளால் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில்தான், மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா, “உலகம் முழுவதும் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது. எனவே, இந்தியாவும் இதே உலகில்தான் இருக்கிறது. வேறுபட்ட முறையில் செயல்படவில்லை. விலை நிர்ணயம் என்னவாக இருக்கும் என்பதை தீர்மானிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரசியலமைப்பின் மூலம் அதிகாரம் பெற்றுள்ளது. எனவே, இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.