“ஆசிரியர்களுக்கு ஆசானாகும் மாணவர்கள்..'' இதழியல் துறையில் அசத்தும் பள்ளிக் கல்வித்துறை!

புது ஊஞ்சல், தேன் சிட்டு சிறார் இதழ்கள்..

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கான சிறார் இதழ்கள், ஆசிரியர்களுக்கான மாத இதழ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் 4 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்காக “புது ஊஞ்சல்”, 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்காக “தேன் சிட்டு” ஆகிய சிறார் இதழ்கள் மாதம் இரு முறையும், ஆசிரியர்களுக்காக “கனவு ஆசிரியர்” என்ற மாத இதழையும் வெளியிட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புத்தகம்

இதில் துளியும் அரசின் விளம்பரங்கள். ஆட்சி குறித்த சுய தம்பட்டங்கள், ஏன் முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் படங்கள் எந்த இடத்திலும் இடம்பெறாமல் முழுக்க முழுக்க அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் வெளிவருவது ஆசர்யம். தற்போது புது ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்கள் 3-ம் ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்திருப்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மாணவர்களே எழுத்தாளர்களாக..

இது குறித்து கல்வி வட்டாரத்தில் பேசினோம், “இன்றைக்கு மாணவர்கள் செல்போனில் மூழ்கி விடுகின்றனர். அவர்களது கையில் சதா நேரமும் செல்போன் இருக்கிறது. அதில் எதையாவது பார்த்து கொண்டே உள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் இதையே செய்கின்றனர். செல்போனின் ஆதிக்கம் வருவதற்கு முன்பு டிவி பார்ப்பார்கள் மற்ற சமயங்களில் புத்தகம் படிப்பார்கள். ஆனால் இன்று யார் கையிலும் புத்தகங்களை பார்க்க முடிவதில்லை.

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை வசப்படுத்தலாம்!

புத்தக வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்த விட்ட இந்த காலக்கட்டத்தில் தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இதழ்கள் வெளியிடும் அசத்தலான முயற்சியை முன்னெடுத்தது. இது வெறுமென வாசிப்புக்காக மட்டுமின்றி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் ஆளுமைமிக்க ஆசிரியர்களை உலகுக்கு அறியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வெற்றிக்கரமாக பயணம் செய்து வருகிறது இந்த இதழ்கள். இதில் மாணவர்களே எழுத்தாளர்களாக மாறி ஆர்வமுடன் கதை, கவிதை, கட்டுரை, பேட்டி எழுதுகின்றனர்.

படைப்பாக்கப் பயிற்சி

பல சூழல்களால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஹெமிஸ்ட்ரி உண்டாவதில்லை. இதனால் பல சிக்கல்களும் எழுகின்றன. இவற்றை களைந்து இருவருக்கும் பிணைப்பை, ஈர்ப்பை உருவாக்கின்றன இந்த புத்தகங்கள். ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கான சூழலை புத்தகங்கள் ஏற்படுத்தியுள்ளன. சொல்லப்போனால் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஆசானாக மாறி வருவது பெருமிதம்.

இதழ்

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் புது ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு சிறார் இதழ்கள் தலா 1.5 லட்சம் பிரதிகளும், கனவு ஆசிரியர் இதழ் சுமார் 40 ஆயிரம் பிரதிகளும் தமிழக பாடநூல் கழகம் மூலம் அச்சடிக்கப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு பள்ளியின் வகுப்பறைக்கு ஓர் இதழ் வீதம் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பப்படுகிறது. 6 முதல் 9 வகுப்பு வரை சுமார் 200 மாணவர்களை தேர்ந்தெடுத்து கதை எழுதுவது, பாடல் எழுதுவது, பேட்டி எடுப்பது குறித்து சென்னை அண்ணா நூலகத்தில் 3 நாள் படைப்பாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் வாசிப்புத் திறன்..

இதுவரையில் புது ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு சிறார் இதழ்களில் 1,200 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் மாத குழந்தைகள் தின சிறப்பிதழ்களில் 250 -க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஓவியங்கள், பாடல்கள், கட்டுரைகள், விடுகதைகள், அறிவியல் துணுக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான படைப்புகள் பிரசுரிக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் படைப்பாளிகளாகவும் மாறியிருகின்றனர்.” என்று தெரிவித்தனர்.

ரவிச்சந்திரன்

திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், “மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிக்கவும் தரமாக மாணவர்களின் கவரும் ஓவியங்களுடன் மிகவும் நேர்த்தியான சிறார் இதழ்களைத் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. டிசம்பர் மாதம் கடைப்பிடிக்கப்படும் உலக மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தேன்சிட்டு, புது ஊஞ்சல் இதழ்களில் சிறப்புக் குழந்தைகளின் படைப்புகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தினர்.

`வாசிப்பை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள்’

அதோடு மட்டுமல்லாமல் கனவு ஆசிரியர் இதழில் ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்டாடும் ஆசிரியர்களின் அனுபவங்கள் நிறைந்த சிறப்பிதழாக வெளியானது. இந்த மூன்று இதழ்களும் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பல தரப்பினரையும் கவர்ந்தது. இதனால் சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் சந்தா செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுத்தியது இந்த இதழ்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என்றார்.

தங்கபாபு, பொறுப்பாசிரியர் பாலபாரதி

இது குறித்து எழுத்தாளரும், ஆசிரியருமான தங்கபாபு, “இன்றைய தலைமுறை சிறார்களிடம் எழுத்துக் கூட்டி படிக்கும் வாசிப்புப் பழக்கம் அருகி, மேலும் கீழும், இடப்பக்கம் வலப்பக்கம் விரல்களால் நகர்த்தும் ஆன்ட்ராய்டு செல் பார்க்கும் பழக்கம் பெருகி விட்ட நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புது ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள் ஒரு வரப்பிரசாதம். ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழ் ஒரு பொக்கிஷம். சாகித்திய அகதாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற இந்த இதழ்களின் பொறுப்பாசிரியர் பாலபாரதி, புத்தகத்தை நேர்த்தியாக வடிவமைத்து அனைவரையும் கவரும் விதமாக பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கிறார்.

ஒருவர் தொடர் வாசிப்பு பழக்கத்தை தினசரி வழக்கமாக்கிக் கொண்டால் அது, அவர்களின் சிந்தனை மற்றும் செயல் திறனை அதிகரிப்பதோடு விசாலப் பார்வையால் உலகை உற்று நோக்கி ஒரு மனித நேயம் தாங்கிய மானுட பார்வையை மனதுக்குள் மலர்த்தும். அத்தகைய மகத்தான பணியினை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த இதழ்கள் ஏற்படுத்துகின்றன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.