ஈஷா: `தனிச்சுடுகாடு; காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள்…" – உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் என்பவர், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தரச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன என்பதை ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு 18-ம் தேதி (இன்று) விசாரணைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டது.

ஈஷா அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து கோவை சமூகநலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இரண்டு நாள்கள் ஈஷா மையத்தில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், ஈஷா யோக மையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் அமர்வு, ‘எந்தவொரு முதன்மையான காரணமும் இல்லாமல், உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த உத்தரவை நிறுத்தி, விசாரணைக்கு தடை விதிக்கிறோம்.” என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை தரப்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 23 பக்க அந்த அறிக்கையில், “ஈஷா அறக்கட்டளை தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளில் மொத்தம் 6 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து வழக்குகள் கைவிடப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

ஜக்கி வாசுதேவ்

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174 (தற்கொலை குறித்து விசாரணை) கீழ் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் இரண்டு வழக்குகள் தடயவியல் ஆய்வக அறிக்கை இல்லாததால் விசாரணையில் இருக்கிறது. ஈஷா அறக்கட்டளையால் மயானம் கட்டப்பட்டிகிறது. அந்த சுடுகாடு அகற்றப்பட வேண்டும் என அந்த நிலத்தின் அருகில் இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சுடுகாடு தற்போது செயல்பாட்டில் இல்லை.

‘ஈஷா அவுட்ரீச்’ நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது உள்ளூர் பள்ளி முதல்வர் ஒருவரால் புகார் அளிக்கப்பட்டதின் படி pocso வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டிருப்பதால், அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. 2021-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் கலந்துகொண்டபோது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக, டெல்லியில் உள்ள சாகேத் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். ஜீரோ எப்.ஐ.ஆர் கோவை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்பே அந்தப் பெண் பாலியல் புகாரை வாபஸ் பெற்றார். பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததற்காக ஈஷா யோகா மையத்தின் மீதான எஃப்.ஐ.ஆர் விசாரணையில் உள்ளது.

உச்ச நீதிமன்றம்

அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஈஷா மையத்தில் 217 பிரம்மச்சாரிகள், 2455 தன்னார்வலர்கள், 891 ஊதிய ஊழியர்கள், 1475 ஊதிய தொழிலாளர்கள், 342 ஈஷா ஹோம் பள்ளி மாணவர்கள், 175 ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், 704 விருந்தினர்கள் (தன்னார்வலர்கள்), 912 விருந்தினர்கள் வசிக்கின்றனர். அந்த வளாகத்தில் இருக்கும் 558 பேரிடம் உணவு, பாதுகாப்பு மற்றும் இதர காரணிகள் குறித்து போலீஸார் தற்செயலாக விசாரித்தனர்.

அந்த விசாரணைக் குழுவில் இருந்த குழந்தை நிபுணர்கள், `குழந்தைகள் உதவி எண், குழந்தைகள் உரிமைகள், போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேவை’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். மனநல மருத்துவர்கள் `சிலரின் செயல்பாடுகள் உறுதியானதாக இல்லை. அவர்களை தொடர்ந்து கண்காணிக்க நேரம் தேவை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கோயம்புத்தூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், மார்ச் 2027 வரை செல்லுபடியாகும் உரிமம் பெற்ற ஈஷா கிளினிக் பற்றிய விரிவான அறிக்கையை அளித்தார்.

காவல்துறை

ஆனால், அந்த கிளினிக்கில் காலாவதியான மருத்துவ உபகரணங்கள். தகுதியற்ற ஊழியர்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. சமையலறையிலிருந்து உணவு மாதிரிகளை எடுக்க முடியவில்லை. பிரம்மாச்சாரிகள் தாங்கள் விரும்பும் போது எங்கும் செல்ல சுதந்திரமாக இருப்பதாகவும், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.