திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது.
இதில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டையிலும் வாசம்செய்துள்ளார். அவர் விஜயநகரத்தில் இருந்து சந்திரகிரிக்கு வரும் போதெல்லாம், திருமலைக்கு தனது பட்டத்து ராணிகளான திருமல தேவி மற்றும் சின்னமாதேவி ஆகியோருடன் திருமலைக்கு பல்வேறு காணிக்கைகளுடன் நடந்து சென்று சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 முறை திருமலைக்கு சென்று சுவாமியை தரிசித்துள்ளார். அவர் கோயிலுக்கு தங்க நைவேத்திய அண்டாக்கள், வைர கிரீடம், ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். மேலும், மூலவருக்கு பொற்காசுகளால் சுவர்ணாபிஷேகமும் செய்துள்ளார் எனகல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மைசூரு தொல்பொருள் ஆய்வு மைய கல்வெட்டு துறை ஆய்வாளர் முனிரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் திருப்பதிகோயிலுக்கு வழங்கிய பொன், பொருள் போன்றவற்றின் விவரங்கள் ஏழுமலையான் கோயில் உண்டியல் இருக்கும் இடத்தில், அதாவது லட்சுமி சிலை வைத்திருக்கும் பகுதியில் காணப்படுகிறது” என்றார். ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. பக்தர்களுக்கு அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு பல மன்னர்கள் பல்வேறுவளர்ச்சிப் பணிகள் செய்திருந்தாலும், ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் சிலை மட்டுமே அவரின் இரு மனைவிகளுடன் உள்ளது.
ஐம்பொன் சிலைகள் திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் காலம் கி.பி 17.01.1471முதல் 17.10.1529 வரை ஆகும். அதாவது நேற்று தான் அவரின் 495-வது நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.