“கம்யூனிஸ்ட்டுகள், திமுக-விடம் ஊதியம் பெரும் வேலையாள்கள்..!” – கொதிக்கும் ஹெச்.ராஜா

“சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறதா?”

“ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் விட பா.ஜ.க-தான் அதிகம் வாக்குகளைப் பெற்றுள்ளது. காஷ்மீரில் கிடைத்த வாக்குகளை வைத்துத்தான் அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் 11%, 10%, 8% வாக்குகள்தான் பதிவாகும். தற்போது 69% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க முடிகிறது. உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தொழில்கள் வளர ஆரம்பித்துள்ளது. அமைதி நிலவுகிறது. இதன் மூலம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது நியாயம் எனத் தெரிகிறது. ஆகவே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சொல்ல முடியாது.”

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

” ‘ஹரியானா தேர்தல் முடிவு சூழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி’ எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறாரே?”

“ஜெய்ராம் ரமேஷ் நன்றாகத்தான் இருந்தார். திடீரென அவருக்கு மனநல கோளாறு வந்துவிட்டதா எனத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் ஒரே நேரத்தில்தான் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் சரியாக வேலை செய்த வாக்கு பதிவு இயந்திரம், ஹரியானாவில் மட்டும் எப்படி வேலை செய்யாமல் இருக்கும்?. இது என்ன குழம்பிய மனநிலை எனத் தெரியவில்லை. அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. எனவேதான் இதுபோன்ற பிதற்றல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குகள் தாமதமாக எண்ணப்பட்டதாகச் சொல்வதெல்லாம் அவர்களின் கற்பனை. தோல்வியை மறைக்க இப்படிப் பேசுகிறார்கள்”

ஜெய்ராம் ரமேஷ்

“ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இடையே சமீப காலமாக முரண் நிலவி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், ‘பா.ஜ.க-வினர் திமிர் பிடித்தவர்கள்’ என விமர்சனம் செய்திருந்தார். இதேபோல் மோகன் பகவத் காட்டமாகப் பேசி வருகிறார். உங்களுக்குள் என்னதான் பிரச்னை?”

“நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடக்கிறது. அதில் நான் உட்பட அனைவரும் பங்கேற்கிறோம். தனிப்பட்ட முறையில் சில தலைவர்கள் கருத்துச் சொல்கிறார்கள். அதையே அமைப்பு முழுவதுக்குமான கருத்தாகச் சொல்வது நியாயம் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.”

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

“ஒடிசா, விசாகப்பட்டினம், மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதற்குத் தனி பட்ஜெட் நீக்கப்பட்டது, 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் போன்றவைதான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?”

“2004 முதல் 2014-ம் ஆண்டு வரையில் சராசரியாக ஆண்டுதோறும் 171 ரயில் விபத்துக்கள் நடந்தன. அப்போது காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சிதான் நடந்தது. 2014 -2023 வரையில் சராசரியாக 71 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளது. ஆகவே பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பா.ஜ.க ஆட்சியில் ரயில் விபத்து அதிகரித்துவிட்டதாக எந்த தற்குறி சொல்வது?

Train Accident | கவரைப்பேட்டை ரயில் விபத்து

“கவரைப்பேட்டை ரயில் விபத்தை மேற்கோள் காட்டி ‘இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்’ எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், ‘6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடக்கிறது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் சாடியிருக்கிறார்களே?”

“காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடந்தது. இப்போது 6 நாட்களுக்கு ஒன்றாகக் குறைந்துள்ளது. காவேரிப்பேட்டை ரயில் விபத்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சக்திகள் செயல்பட்டு இருக்கலாம். ஏனெனில் 15, 20 நாட்களுக்கு முன்பு மரக்கட்டையைத் தண்டவாளத்தில் போட்டிருக்கிறார்கள். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகச் செய்தித்தாளில் படித்தேன். ஆகவே இதுபோன்ற சதி வேலைகளில் தேசத்திற்கு விரோதமான சக்திகள் ஈடுபடுகிறார்களோ என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அந்த அறிக்கை வெளியில் வந்தபிறகுதான் உண்மை தெரியும்”

கவரைப்பேட்டை ரயில் விபத்து: சீரமைப்பு பணிகள் தீவிரம்

“தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றுவதற்கான முதல் படிதான் ஒருங்கிணைப்புக் குழு என்கிறார்களே?”

“அண்ணாமலை மேல் படிப்புக்காகச் சென்று 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அன்றாட பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன பிரச்னை இருக்கிறது?. அதுபோல எதுவும் நடக்கவில்லை. இதுபோன்று வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

அண்ணாமலை

“ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்கிற இலக்கு வைத்த உங்களுக்கு 20 லட்சம் என்கிற எண்ணிக்கையைக் கூட நெருங்க முடியவில்லையே?”

“உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. பூத்துக்கு 200 பேரை இணைக்க வேண்டும் என்ற சொல்லியிருக்கிறோம். எனவே 2 கோடி என்கிற உறுப்பினர் எண்ணிக்கை வருகிறது. இரண்டு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக தி.மு.க-வும், ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அ.தி.மு.க-வும் சொல்கிறது. ஆனால் அவர்களுக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைவுதான். ஒரு உறுப்பினர் இருக்கிறார் என்றால் அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரின் வாக்குகளும் அந்த கட்சிக்குக் கிடைக்கும். எனவே அவர்கள் கூறுவது அதிகம். நாங்கள் உண்மையாக உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்”

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா

“கருணாநிதி நாணயம் வெளியீடு, ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பு, செந்தில் பாலாஜி விடுதலை போன்றவற்றின் மூலமாக தி.மு.க, பா.ஜ.க இடையே ரகசிய உறவு இருக்கிறது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?”

“ஆளுநர் தேநீர் விருந்துக்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருந்தார். நான் கூட சென்றிருந்தேன். முதல்வர், அமைச்சர்கள் என்னிடம் நலம் விசாரித்தார்கள். கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும், மறைவடைந்தபோதும் பிரதமர் மோடி வந்தார். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்போருக்கு மட்டுமே அங்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால் உறுப்பினராக இல்லாதபோதும் ஒருசில தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அப்படிதான் கருணாநிதிக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணியிலிருந்தோம். செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம்தான் ஜாமீன் வழங்கியுள்ளது. அதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதைவைத்துக்கொண்டு இரண்டு கட்சிகளுக்கும் உறவு இருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது”

எடப்பாடி பழனிசாமி

“அ.தி.மு.க-வில் எடப்பாடி தவிர சில தலைவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கிறார்களே?'”

“இது அ.தி.மு.க-வின் உட்கட்சி விஷயம். நான் கருத்துச் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன்”

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

“அடிப்படை உரிமைகளுக்காக சாம்சங் ஊழியர்கள் போராடி வரும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க-வை கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தவில்லையே?”

“பா.ஜ.க-வில் தீவிர உறுப்பினர் சேர்க்க நடந்து வருகிறது. எனவே நிர்வாகிகளின் கவனம் சிதற வேண்டாம் என்பதால்தான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் எனது கருத்தைச் சொல்லிவிட்டேன். அதேபோல மற்ற தலைவர்களும் சொல்லிவிட்டார்கள். இந்தியாவில் பல இடங்களில் சீனாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் தொழிற்சங்கம் வேண்டும் என சி.ஐ.டி.யு போராடுகிறதா?. பிரதமர் மோடியே காங்கிரஸுக்கு ‘அர்பன் நக்சல் மைண்ட் செட்’ இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். உலகத்தில் அதிகமாகக் காப்பர் வர்த்தகம் செய்யும் நாடு சீனா. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து காப்பர் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் மார்க்கெட் மந்தமானது.

இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன்

இதையடுத்துதான் சீனாவுக்கு ஆதரவான அர்பன் நக்கல்கள், இடதுசாரி சக்திகள் தீவிரமாகப் போராடினார்கள். அந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது. அதேபோலத்தான் கொரியன் நாட்டு நிறுவனமாக சாம்சங்க்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் சாம்சங் நிறுவனம் மூடப்பட்டுவிட்டால் சீனாவின் வர்த்தகம் இங்குக் கூடும். எனவேதான் இந்த போராட்டம் நடக்கிறது. சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களின் 15 கோரிக்கைகளில் 14-யை ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் சி.ஐ.டி.யு பெயரில் தொழிற்சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காக ஊழியர்களை பலிகடாக்கி வருகிறார்கள். இது எந்த விதத்திலும் நியமானது அல்ல. மாநில அரசின் கூட்டணிக் கட்சிகள்தான் போராடுகிறார்கள். எனவே அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

“ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நினைத்தாலும் தீர்வை எட்ட முடியும். ஆனால் அவர்கள் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்கிறார்களே தொழிலாளர்கள்?”

“தி.மு.க-விடம் ரூ.25 கோடி வாங்கியவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே இவர்கள் தி.மு.க-விடம் ஊதியம் பெரும் வேலையாட்கள். சாம்சங் நிறுவனத்தில் 4,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தில் 2,000-க்கும் குறைவானவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். சி.ஐ.டி.யு-வின் நோக்கம் சாம்சங் நிறுவனத்தை நாட்டைவிட்டு வெளியில் அனுப்ப வேண்டும் என்பதுதான். அவர்களும் நொய்டா, புனே போன்ற இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கிறார்கள். ஐடி ஹப்பில் இருக்கின்ற பல நிறுவனங்கள் புனேவிலும் ஒரு அலுவலகத்தை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் போராட்டத்தால் கேரளாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறிவிட்டன. அதேநிலைதான் தமிழகத்தில் ஏற்பட்டுவிடும். எனவே இதில் தி.மு.க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

விஜய்

“விஜய் பெரியார் திடலுக்குச் சென்றால் தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு என்றீர்கள். ஆனால் அவர் ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். இதையடுத்து பா.ஜ.க-வுக்குதான் பாதிப்பு என்கிறார்களே தி.மு.க-வினர்?”

“ஆயுதபூஜைக்கு விஜய் வாழ்த்து சொன்னதைப் பார்க்கும்போது அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என நினைக்கிறேன். வளர்ந்துவரும்  இந்து ஒற்றுமைக்கு இதெல்லாம் ஒரு உதாரணம். இதுவரை நீங்கள் உதாசீனப்படுத்திய இந்து உணர்வுகளை இனியும் தொடர்ந்து உதாசீனப்படுத்த முடியாது என்பதற்கு இதுவொரு உதாரணம். அதேநேரத்தில் விஜய் ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்லியதால் மட்டுமே அவருக்குப் பின்னால் இந்து வாக்காளர்கள் அனைவரும் செல்ல மாட்டார்கள். ஏனெனில் நிலைத்தன்மை வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. இதனால் எந்த பக்கம் இருக்கிறார் எனத் தெரியவில்லை”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.