கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான வகையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2022 ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பள்ளிக்குச் சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையடுத்து, மாணவி உயிரிழப்புத் தொடர்பான வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவியின் தாய் செல்வி நீதிமன்றத்தில் ஆஜாரானார். பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.