சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
மேலடுக்கு சுழற்சி: இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் தற்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதிவரை பெரும்பாலான இடங்களிலும், 23-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தில் இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20, 21-ம்தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டானத்தில் 6 செமீ, தொண்டியில் 5 செமீ, புதுக்கோட்டை மாவட்டம்ஆவுடையார்கோவில், ராமநாத புரம் மாவட்டம் திருவாடானை ஆகிய இடங்களில் தலா 4 செமீ,திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, திருத்தணி, ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம், சென்னை மணலி, திருவொற்றியூர், நீ்லகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.