கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்13-வது நாளை எட்டியது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதிகிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தனர். அவர்களும் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், 6 பேரின் உடல்நலம் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.