சென்னை: “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்யவில்லை” என்று டிடி தமிழ் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் – தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது என்ன? – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நமது மக்களை பிரித்துள்ளது. இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சத்தமிட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தவர் பிரதமர் மோடி. ஆனால், இங்கிருக்கும் சிலர் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனர். தமிழின் பெயரால் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றனர். இதுபோன்றவர்கள், நீண்ட நாட்களுக்கு வெற்றி பெற முடியாது. உலகின் பெருமையான மொழி தமிழ். அதற்காக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். முழுமையாக வாசிக்க > “தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம்…” – ‘இந்தி மாத’ நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்