புதுடெல்லி: உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்தது என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டில் கேரளாவில் பிஎப்ஐ அமைப்பு தொடங்கப்பட்டது. கேரளா, தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பிஎப்ஐ உடன் இணைந்தன. இந்த அமைப்புக்கு 22 மாநிலங்களில் கிளைகள் இருந்தன. டெல்லி ஷாகின் பாக் போராட்டம், பெங்களூரு கலவரம், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹ்ரான்பூர் கலவரம் ஆகியவற்றில் பிஎப்ஐ மீது குற்றம் சாட்டப்பட்டது. கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மதரீதியாக நடைபெறும் கொலைகளிலும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் பிஎப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தியது. அப்போது அந்த அமைப்பின் சட்டவிரோத செயல்கள், தீவிரவாத நடவடிக்கைகள் அம்பலமாகின. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2022 செப்டம்பர் 28-ம் தேதி பிஎப்ஐ அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதற்கிடையே, பிஎப்ஐ அமைப்பின் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இது குறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனிநபர்கள் பெயர்களில் இருந்த பிஎப்ஐ அமைப்பின் 35 அசையா சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.56.56 கோடி. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிஎப்ஐ பெருமளவில் நிதி திரட்டி உள்ளது. குறிப்பாக ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, காஷ்மீர்,மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 29 வங்கிக் கணக்குகள் மூலம் பிஎப்ஐ அமைப்பு பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.94 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக திரட்டப்பட்ட பணம். இதுதொடர்பாக பிஎப்ஐ அமைப்பின் 26 நிர்வாகிகளை கைது செய்துள்ளோம். பிஎப்ஐ அமைப்பில் 13,000-க் கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். சிங்கப்பூர், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்த அமைப்பு செயல்பட்டிருக்கிறது. அங்கும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் இருந்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம் மக்களிடம் இருந்து பிஎப்ஐ அமைப்பு பெருமளவில் நிதி திரட்டி உள்ளது. இந்த நிதியின் மூலம் இந்தியாவில் பல்வேறு நாச வேலைகள் அரங்கேற்றப்பட்டு உள்ளன.
உள்நாட்டு கலகம் மூலம் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பிஎப்ஐ சதித் திட்டம் தீட்டியிருந்தது. இதுதான் அந்த அமைப்பின் உண்மையான நோக்கம். இதற்காக தற்காப்பு கலை என்ற பெயரில் ஏராளமான இளைஞர்களுக்கு அந்த அமைப்பு ஆயுத பயிற்சி வழங்கி உள்ளது. சட்டங்களை மீறி நடப்பது, அரசுக்கு இணையாக போட்டி அரசை நடத்துவது, இந்திய உளவாளிகளின் பெயர், விவரங்களை அம்பலப்படுத்துவது போன்ற சதி வேலைகளில் பிஎப்ஐ ஈடுபட்டு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் அந்த அமைப்பு பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வந்தது. கராத்தே பயிற்சி, உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களுக்கு கத்தி, வாள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை அளித்து போர் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரளாவின் கண்ணூர் மாவட்டம், நாரத் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டில் பிஎப்ஐ நடத்திய தற்காப்பு கலைபயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது.
பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களிடம் மோதல்களை ஏற்படுத்தி பதற்றத்தை அதிகரிக்க பிஎப்ஐ தொடர்ந்து சதி செய்து வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அவரது பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் பாட்னாவில் பிஎப்ஐ ரகசியமாக ஆயுத பயிற்சியை நடத்தியது. கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் பிஎப்ஐ அமைப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.