பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தா போலீஸாரும் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மைசூரு மாநகர மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மரிகவுடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டுதலின் பேரில் ராஜினாமா செய்துள்ளேன். எனக்கு வேறு எந்த அழுத்தம் தரப்படவில்லை’ என தெரிவித்தார். இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் சித்தராமையாவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தார். முதல்வர் சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது நில முறைகேடு வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது? எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை சமாளிப்பது எப்படி? ராஜினாமா செய்யாமல் பதவியை தொடர்வது? கட்சிக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை எவ்வாறு எதிர்கொள்வது? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின் டெல்லி திரும்பிய கே.சி.வேணுகோபால் சித்தராமையாவுடன் நடத்திய ஆலோசனை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.