புதுடெல்லி,
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்'(BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷியாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
ரஷியாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22-23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா செல்ல உள்ளார். தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், இதுவரை பிரிக்ஸ் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.