காசாவில் இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் வெள்ளிக்கிழமை (அக்.18) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் தலைவரின் இறப்புக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யஹ்யா சின்வர் மரணம் ஹமாஸ் அமைப்பின் தலைமையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து உத்வேகத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. கடந்த ஜூலையில் அப்போதைய ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றார் சின்வர்.
கடந்த ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சின்வர், தொடர்ந்து அந்த அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். எனவேதான் அவருடைய இறப்பு ஹமாஸ் இயக்கத்துக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சூழலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கத்தாரில் இருக்கும் ஹய்யா உள்ளிட்ட நாடுகடத்தப்பட்ட ஹமாஸ் பிரமுகர்கள், சின்வருக்கு நெருக்கமானவர்கள் என பலரது பெயர்களும் அடிபடுகின்றன. 2017ஆம் ஆண்டு இஸ்மாயில் ஹனியே தலைவராவதற்கு முன்பு அந்த பொறுப்பில் இருந்த காலேத் மேஷால் போன்றவர்களும் அடுத்த தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
யுத்த களத்தில் இருந்து செயல்படுபவரே அடுத்த தலைவராக வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் யஹ்யா சின்வரின் இளைய சகோதரர் முஹம்மது சின்வருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. யஹ்யாவைப் போல வசீகரமான தலைவருக்குரிய அம்சங்கள் முஹம்மதுவிடம் இல்லையென்றாலும், ஒரு படைவீரராகவும், போராளியாகவும் அவருக்கென்று நல்ல பெயர் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, யஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருந்தாலும், ‘காசா போர் இன்னும் முடிவடையவில்லை’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் இன்னும் போர் பதற்றததை அதிகரிக்கச் செய்துள்ளது. காசாவில், அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 42,438 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 99,246 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். தெற்கு லெபனானில் நடந்த மோதலில் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.