புதுடெல்லி: வங்கக் கடலில் வரும் அக்.22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ஜான் கருத்து: இந்நிலையில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வலுவிழந்த நிலையிலேயே நீடிக்கும் வரை தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. எனவே, அடுத்த வாரம் வடக்கு அந்தமான் அருகே இந்தோ – சீனாவிலிருந்து வரும் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். அது அந்தமான் கடலுக்குள் நுழையும்போது நமது சென்னைக்கு மேலே இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாதபட்சத்தில் அது தாழ்வான கிழக்குப் பகுதிகளால் தமிழகத்தை நோக்கித் தள்ளப்படும். பெரும்பாலும் அது தீவிரமடைந்து மேலே செல்லும். நவம்பரில் தான் தமிழகத்துக்கு அதிக மழை வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்பு தான், எங்கு பலத்த மழை பெய்யும் என்பதை நாம் அறிய முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – நெல்லூர் இடையே நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை கரையைக் கடந்தது. இந்நிலையில் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சென்னையில் இன்று (அக்.18) பரவலாக காலை முதலே மழை பெய்து வருகிறது.