சண்டிகர்: ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று 2-வது முறையாக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தே.ஜ. கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஹரியானாவில் கடந்த 5-ம் தேதிநடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 90 இடங்களில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 37 இடங்களை கைப்பற்றியது. சண்டிகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள்கூட்டத்தில், ஹரியானா சட்டப்பேரவை பாஜக தலைவராக முதல்வர் நயாப் சிங் சைனி (54) மீண்டும்தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ராமாயணம் எழுதிய வால்மீகி பிறந்த தினமான நேற்று பாஜகஅரசு தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்க முடிவு செய்தது. பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தே.ஜ. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக நேற்றுபதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் நயாப் சிங் சைனியுடன் பாஜக எம்எல்ஏக்கள் அனில் விஜ்,கிருஷ்ணன் லால் பன்வர், ராவ்நர்பிர் சிங் உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில் 2 பேர் பெண்கள்.
செய்தியாளர்களிடம் முதல்வர் சைனி கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் ஹரியானா மாநிலத்தை விரைவாக முன்னேற்றுவதை நோக்கி புதிய பாஜக அரசு செயல்படும். மோடி அரசின் கொள்கைகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகதேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் முழுவதுமாக நிறைவேற்றப்படும். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுதேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நாங்கள் முழுவதுமாக நிறைவேற்றினோம். அதேபோல, தற்போதைய தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஹரியானாவில் நேற்று நடைபெற்ற பாஜக அரசின் பதவியேற்பு விழாவை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் அவசர மனு தாக்கல் செய்தார். ‘தேர்தல் முடிவில் சந்தேகம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என கருதுகிறோம். 20 தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பதவியேற்பு விழா தொடங்கும் முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, ‘‘முதலில் மனுவின் பிரதிகளை 3 நீதிபதிகளுக்கும் வழங்குங்கள். அதை நாங்கள் படிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவியேற்பு விழாவுக்கு நாங்கள் தடை விதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா. இந்த விழாவை நாங்கள் எப்படி தடுக்க முடியும். இதுபோன்ற மனுவை தாக்கல் செய்த உங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும்’’ என்று எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.