‘அக்.21 வரை தான்’ – கோரிக்கைகளை நிறைவேற்ற மம்தா அரசுக்கு பயிற்சி மருத்துவர்கள் கெடு

கொல்கத்தா: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மேற்குவங்க அரசுக்கு அக்.21-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர். தவறும்பட்சத்தில் அக்.22-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களில் ஒருவரான தேபாசிஷ் ஹலடர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் கோரிக்கைக்களை நிறைவேற்றித் தரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இளநிலை மற்றும் மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (அக்.22) மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எங்களின் சகாக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் திங்கள் கிழமைக்குள் (அக்.21) நடவடிக்கை எடுக்காவிட்டால், செவ்வாய்க்கிழமை முதல் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு பயிற்சி மருத்துவரான சயந்தனி கோஷ் ஹஸ்ரா, “எங்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 14 நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி ஏன் தங்களை இன்னும் வந்து சந்திக்கவில்லை. அவர் இந்த மாநிலத்தின் பாதுகாவலர். நாங்கள் அவரின் குழந்தைகளைப் போன்றவர்கள். எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவர் ஒருமுறையாவது எங்களை சந்திக்கக் கூடாதா?” என்றார். ஹஸ்ரா அக்.5-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இளநிலை மருத்துவர்கள் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தனர். அவர்களும் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் 42 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு மருத்துவர்களுக்கு உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து செப்.21-ம் தேதி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. என்றாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.