போபால்: அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறந்த சாலை வசதி, நீர்வழித் தடம் மற்றும் ரயில்வே ஆகியவை தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அவர் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சாலை மற்றும் பாலம் கட்டுமானம், தொழில்நுட்பம் கருத்தரங்கை சனிக்கிழமை அவர் தொடங்கி வைத்தார்.
‘அமெரிக்கா செல்வ செழிப்பு மிக்க நாடாக இருப்பதால் அமெரிக்க சாலைகள் சிறப்பானதாக இல்லை. ஆனால், அமெரிக்க சாலைகள் சிறப்பாக இருப்பதால் அமெரிக்கா செல்வா செழிப்புடன் உள்ளது’ என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் மேற்கோளை அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார்.
“வரும் நாட்களில் இந்திய சாலை கட்டமைப்பு வசதி அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் என்ற கனவை நான் காண்கிறேன். அதற்கு உங்களது ஆதரவு அவசியம். சாலை அமைக்க கட்டுமான பொருட்கள் இல்லெனியென்றால் கழிவுகளை கொண்டு சாலை அமைக்கலாம். அதற்கேற்ற வகையில் நகர பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டியது அவசியம். இதுவரை சாலை அமைக்க சுமார் 80 லட்சம் டன் குப்பைகளை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். டெல்லி காசிப்பூரில் உள்ள குப்பை கிடங்கின் உயரம் சுமார் 7 மீட்டர் குறைந்துள்ளது.
சாலை விபத்துகளில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் அப்படி ஏற்படும் உயிரிழப்புகள் மனிதத்துக்கு நல்லது அல்ல. அதனால் அதிகாரிகள் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து, முறையான விசாரணை நடத்தி மேம்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் எச்சரிக்கை ஒளி விளக்கை பொருத்த வேண்டும். மேலும், சூழலை காக்கும் வகையில் சாலைகளில் மரங்களை வைக்க வேண்டும். இது சூழல் மாசினை தடுக்கும்” என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.