இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை நல்ல தொடக்கம் ஆகும். இங்கிருந்தே இரு நாடுகளும் முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

எனது ஆட்சிக் காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் உறவை சீர்படுத்த தீவிர முயற்சி செய்தேன். ஆனால் எனது முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி லாகூரில் உள்ள எனது வீட்டுக்கு வருகை தந்தார். இது சாதாரண விஷயம் கிடையாது. அவரது வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடையே சுமுக உறவு இல்லை. ஆனால் இரு நாடுகளின் மக்களுக்கு இடையே நல்லுறவு நீடிக்கிறது. கிரிக்கெட் மூலம் இரு நாடுகளின் உறவை வளர்க்க வேண்டும். இந்தியாவில் இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகள் விளையாடினால் அந்த போட்டியை பார்க்க நான் இந்தியா வருவேன். இந்தியாவின் வேளாண் விளைபொருட்கள், இதர சரக்குகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து பாகிஸ்தானுக்கு இந்திய பொருட்கள் வந்து சேருகின்றன. இரண்டு மணி நேரத்தில் இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகளை கொண்டு வர முடியும். ஆனால் இப்போது துபாய் வழியாக 2 வாரங்கள் கழித்து பொருட்கள் வந்து சேருகின்றன. இதனால் இரு நாடுகளுக்குமே லாபம் கிடையாது.

கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், லாகூருக்கு வருகை தந்தார். அவரது பாகிஸ்தான் வருகை தொடர்பான வீடியோக்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். பழைய சம்பவங்களை இப்போதும் நினைவுகூர்கிறேன். எனது தந்தை முகமது ஷெரீப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவர் ஆவார். இந்தியா எங்களது அண்டை நாடு. இதை மாற்ற முடியாது. நாம் ஏற்கெனவே 75 ஆண்டுகளை இழந்துவிட்டோம். இப்போது அடுத்த 75 ஆண்டுகள் குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் அவரது மகளும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வருமான மரியம் இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.