சமையல் எண்ணெய், முந்திரி, நெய், விலை அதிகரிப்பு எதிரொலி: தீபாவளி இனிப்பு பலகார வகைகள் கிலோவுக்கு ரூ.50 உயர்வு

கோவை: தமிழகத்தில் சமையல் எண்ணெய், முந்திரி, நெய் மற்றும் கடலை மாவு விலை உயர்வு காரணமாக தீபாவளி இனிப்பு, பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக முந்திரி பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் காஜு கத்தலி உள்ளிட்ட இனிப்புகளின் விலை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பாமாயில், சோயாபீன், எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 33.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையிலும், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாகவும், சமையல் எண்ணெய் விலை யாரும் எதிர்பாராத வகையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. சமையல் தேவைக்கும், இனிப்பு, பலகாரங்கள் தயாரிப்புக்கு முக்கியமாக உள்ள சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏழை, நடுத்தர குடும்பங்களில் அத்தியாவசியப் பொருட்களின் மாத செலவை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா கூறும்போது, “சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெய் விலை ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. பாமாயில் லிட்டர் ரூ.120 வரை விற்பனையாகி வந்தது. இப்போது ரூ.30 அதிகரித்து ரூ.150 ஆக விலை உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.210 ஆக விலை அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்கத்தின் துணை செயலாளர் கணேசன் கூறும்போது, “முந்திரி எப்போதும் இல்லாத வகையில் கிலோவுக்கு ரூ.700-ல் இருந்து ரூ.980 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் முந்திரி பருப்பில் இருந்து உற்பத்தியாகும் காஜு கத்திலி உள்ளிட்ட இனிப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. நெய் ஒரு லிட்டர் ரூ.550-ல் இருந்து ரூ.620 வரை விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை 50 கிலோ சிப்பம் ரூ.3650-ல் இருந்து ரூ.4,100 ஆக விலை உயர்ந்துள்ளது.

இதனால் சர்க்கரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது. கடலை மாவு ரூ.80-ல் இருந்து ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது. சுமார் 50 சதவீத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் கடலை மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் லட்டு, மைசூர்பாக் ஆகியவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சாதாரண இனிப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. மிக்சர் வகை விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.