"சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம்" – சத்குரு ஜக்கி வாசுதேவ்

புதுடெல்லி,

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்ற தனது மகள்கள் லதா, கீதாவை மூளைச்சலவை செய்து சன்னியாசிகளாக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 3-ந்தேதி இந்த மனுவை விசாரித்து, நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், பதில் மனு தாக்கல் செய்ய எதிர் மனுதாரர் காமராஜுக்கும் உத்தரவிட்டது. இதையடுத்து இரு தரப்பிலும் நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘தமிழ்நாடு அரசின் அறிக்கையில் இரு பெண் துறவிகளும் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதில் நியாயமில்லை. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை’ என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, ‘ஈஷா மையம் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஆட்கொணர்வை முடித்து வைக்கும் உத்தரவு தடையாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என வாதிட்டார்.

காமராஜ் தரப்பு வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, ‘ஈஷா மையம் அமைத்துள்ள யானைகள் நடமாட்டம் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதால், மகள்கள் குறித்த கவலை உள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களின் ஆசிரமங்கள், சத்திரங்கள், மடங்கள், விடுதிகள் தங்கியிருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாரம் ஒருமுறை பெண் போலீசை அனுப்பி அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கோவை ஈஷா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது. அதே சமயம் ஈஷா யோகா மையம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் துறைக்கு தடை இல்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக ஈஷா யோகா மைய நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று அதில் சத்குரு தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.