காசா: ஹமாஸ் பிரிவு தலைவர் யாஹியா சின்வர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார், இறப்பதற்கு முன்பு அவரின் முன்கை உடைக்கப்பட்டு, அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று சின்வரின் உடற்கூராய்வு அறிக்கையை மேற்பார்வையிட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சின்வர் தலையில் குண்டு துளைக்கும் முன்பு கடுமையாக காயமடைந்திருந்தார் என்றும் அம்மருத்துவர் தெரிவித்தார். உயிரிழந்தது ஹமாஸ் தலைவர்தானா என்பதை உறுதி செய்ய 61 வயதான சின்வரின் விரல் ஒன்று வெட்டப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
யாஹியா சின்வரின் உடற்கூராய்வு அறிக்கையை மேற்பார்வையிட்ட இஸ்ரேல் தேசிய தடையவியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் சென் குகேல் செய்தித்தாள் ஒன்றிடம் கூறியதாவது: யாஹியா சின்வர் தலையில் குண்டு தாக்கி ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார். ஒரு சிறிய வகை ராக்கெட் அல்லது டேங்க் குண்டு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அவரது முன்னங்கை உடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பியைப் பயன்படுத்தி அவர் ரத்தப்போக்கினை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முழுவதுமாக பலனளிக்கவில்லை. அந்த அளவுக்கு பலம் அவரிடம் அப்போது இல்லை.
சின்வர் இறந்து 24 முதல் 36 மணி நேரத்துக்கு பின்னர் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்த உடன் சின்வரின் உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் யாரும் அறியாத இடத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம்.
டிஎன்ஏ சோதனை மூலமாக சின்வரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. அவரது விரல் துண்டிக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தினால் ஆய்வு அனுப்பப்பட்டது. ஆய்வகம் தனது அறிக்கையைத் தயார் செய்த பின்பு அது, சின்வர் இஸ்ரேலில் கைதியாக இருந்தபோது தயாரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அதன் மூலம் இறுதியாக டிஎன்ஏ மூலம் அவரது அடையாளத்தினை நாங்கள் உறுதி செய்தோம். இவ்வாறு மருத்துவர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் ராணுவம் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதாக அக்.17-ம் தேதி வியாழக்கிழமை அறிவித்தது. ஹமாஸ்கள் அதனை வெள்ளிக்கிழமை உறுதி செய்தனர்.இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்.7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் சின்வர் இஸ்ரேலின் முக்கியமான எதிரியாக இருந்தார்.