புதுடெல்லி: கனடா எல்லை பாதுகாப்பு அமைப்பின் (CBSA) அதிகாரி சந்தீப் சிங் சித்து, பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள இந்தியா, அவரை நாடு கடத்துமாறு கோரி உள்ளது.
சிபிஎஸ்ஏ அதிகாரியும், தடைசெய்யப்பட்ட சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினருமான சந்தீப் சிங் சித்து, பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் மற்றும் ஐஎஸ்ஐ செயல்பாட்டாளர்களுடன் சந்தீப் சிங் சித்து தொடர்பு வைத்திருந்ததாகவும், 2020-ல் பல்விந்தர் சிங் சந்து கொலை செய்யப்பட்டதில் அவருக்கு தொடர்பு உள்ளதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஷௌர்ய சக்ரா விருது பெற்றவரான பல்விந்தர் சிங் சந்து, காலிஸ்தான் போராளிகளுக்கு எதிராக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) அமைப்பு நடத்திய காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை எதிர்த்தவர். இதன் காரணமாக, அவர் கொல்லப்பட்டார். ‘சன்னி டொராண்டோ’ என்பவரும், பாகிஸ்தானில் தஞ்சமடைந்த பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் உள்ளிட்ட கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி செயற்பாட்டாளர்களும் பல்விந்தர் சிங் சந்துவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றம் சாட்டியுள்ளது. ‘சன்னி டொராண்டோ’ என்பது சந்தீப் சிங் சித்துவின் மாற்றுப்பெயரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, கனடாவில் வசிக்கும் 26 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் அவர்களை இதுவரை கனடா அரசு நாடு கடத்தவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில், சந்தீப் சிங் சித்துவின் பெயரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.