புதுடெல்லி: “இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், கார்பனை மையப் படுத்திய தயாரிப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது” என்று சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பகுதியாக 2030-க்குள் குறிப்பிட்ட அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை இந்த இலக்கை அடைவதற்கு சவாலாக இருக்கும் என்று மூடீஸ் அறிக்கை வழியே தெரியவந்துள்ளது. 2019-ம் ஆண்டு இந்தியாவின் சர்வதேச பசுமை குடில் வாயு வெளியேற்றம் 6.7 சதவீதமாக இருந்தது. 2022-ம் ஆண்டில் அது 7.5 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பால் பசுமை குடில் வாயு வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் இந்தியாவில் உள்ளது என்று அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து மூடீஸ் கூறுகையில், “உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அதேபோல் மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் தொழில்மயமாக்கலும் நிகழ்ந்து வருகிறது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் கட்டமைப்பை உருவாக்கி வருகின்ற போதிலும், இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளது.