Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா… தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
வேர்க்கடலைக்கு ‘ஏழைகளின் புரதம்’ என்றொரு பெயர் உண்டு. காஸ்ட்லியான பாதாம், வால்நட்ஸை விட அதிக புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கிறது. அந்தக் காலத்தில் வேர்க்கடலை உருண்டையும் வேர்க்கடலை சிக்கியும்தான் பிரபல புரத உணவுகளாக, ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளாக இருந்தன.
100 கிராம் வேர்க்கடலையில் 25 கிராம் புரதச்சத்தும், கொழுப்புச்சத்து 40 சதவிகிதமும் 567 கலோரிகளும் இருக்கின்றன. வேர்க்கடலையை யார், எப்படிச் சாப்பிடலாம் என ஒரு கணக்கு இருக்கிறது. வயதானவர்களுக்கு வேகவைத்துக் கொடுப்பதுதான் சிறந்தது. வறுத்த வேர்க்கடலை அவர்களுக்கு எளிதில் செரிமானமாகாது.
குழந்தைகளுக்கும் வொர்க் அவுட் செய்வோருக்கும்கூட வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையே சிறந்தது. குழந்தைகளுக்கு வேர்க்கடலை சுண்டலை ஸ்னாக்ஸாக கொடுக்கலாம். புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் சிலருக்கு பித்தம் அதிகமாகும். அதனால் எந்த வடிவில் வேர்க்கடலையை எடுத்துக்கொண்டாலும் அளவோடு சாப்பிட வேண்டியது முக்கியம்.
வெறும் 100 கிராம் வேர்க்கடலையிலேயே 567 கலோரிகள் இருப்பதால், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இதைப் பார்த்துச் சாப்பிட வேண்டும். மற்றபடி, சைவ உணவுக்காரர்கள் புரதத்தேவைக்காவும், புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களும் வாரத்துக்கு 3 நாள்கள் வேர்க்கடலை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஏதேனும் உடற்பயிற்சி செய்த பிறகோ, விளையாடி முடித்த பிறகோ தசைகளின் ஆரோக்கியத்துக்கு புரதம் தேவைப்படும் என்பதால், அந்த நேரம் வேர்க்கடலை எடுத்துக்கொள்வது நல்லது.
பொதுவாகவே, வறுத்த வேர்க்கடலையைவிடவும் வேகவைத்த வேர்க்கடலையே ஆரோக்கியமானது. எப்போதாவது ஒரு மாறுதலுக்கு வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.