IND vs NZ Test Latest Updates Tamil : இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில், இன்னும் ஒருநாள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. நாளை நடைபெறும் கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏதேனும் மாயாஜாலம் நடந்தால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும். இல்லையென்றால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெறும். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கடந்த 36 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டிகூட வென்றதில்லை.
இந்த சோகமான வரலாற்றை முறியடிக்க நியூசிலாந்து அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாளை 107 ரன்கள் எடுத்து அந்த வெற்றி பெற்றால் இந்த சோகமான வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரலாம். அதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீது 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை பெற்ற கேப்டன் என்ற மோசமான சாதனை முத்திரை விழும். இதனை தவிர்க்க இந்திய அணி வீரர்கள் நிச்சயம் கடுமையான போராட்டத்தைக் கொடுப்பார்கள். ஏனென்றால், இதற்கு முன்பு 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக.
2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அந்த அணிக்கு வெற்றி இலக்காக இந்திய அணி 107 ரன்களை மட்டுமே நிர்ணயித்திருந்தது. எளிமையான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முடிவில் 13 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடி அசத்தியது. அப்போட்டியில் ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளையும், முரளி கார்த்திக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அப்படியான மாயாஜாலம் ஏதும் நடந்தால் நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறலாம்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரை பேட்டிங் பிட்ச் தான். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் ஆடி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே இவ்வளவு பெரிய பின்னடைவுக்கு காரணம். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேபோல் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியும். இப்போதைய சூழலில் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கையிலேயே இருக்கிறது. மாயாஜாலம் ஏதும் நடக்குமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.