Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' – பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு எளிதில் கிடைத்ததில்லை. ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் வியர்வை தீர உழைத்து சரியான நேரத்தில் நினைத்தது கிடைக்காமல் தனக்கான நாளுக்காக விடாப்பிடியாக காத்திருந்து காத்திருந்துதான் கடைசியாக இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டார்.

இப்போது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கையை விட்டு சென்றுவிட்ட ஒரு போட்டியை தனது அசாத்தியமான ஆட்டத்தால் மீண்டும் இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் முதல் சதமே ஒரு வரலாற்றுத் தருணமாக மாறும் மதிப்பை எட்டியிருக்கிறது. முன்பே சொன்னதைப் போலத்தான் அவருக்கு இந்த வாய்ப்பெல்லாம் அவ்வளவு எளிதாக கிட்டியதில்லை.

வங்கதேசத்துக்கு எதிராக சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடியிருந்ததே. அந்தத் தொடரிலும் இந்திய அணியில் சர்ப்ராஸ் கான் இடம்பிடித்திருந்தார். ஆனால், லெவனில் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ‘அணியில் சீனியர் வீரர்கள் இருக்கையில் ஜூனியர் வீரர்கள் வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். இந்த மாதிரியான காலக்கட்டங்களையும் அவர்கள் கடந்துதான் ஆக வேண்டும்.’ என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியிருந்தார். சேப்பாக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி நடந்துகொண்டிருந்த போது, ஒரு பக்கம் இந்தியாவும் வங்கதேசமும் மோதிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் வலைப்பயிற்சி மைதானத்தில் சர்ப்ராஸ் கான் நெட் பௌலர்களுடன் கடுமையாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். வாய்ப்புக்காக ஏங்கி நிற்பதும்… காத்திருத்தலும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

ரஞ்சி டிராபியில் வேறெந்த வீரரும் ஆடாத அளவுக்கு சீராக ஆடியிருந்தார் சர்ப்ராஸ் கான். 2019 – 20 சீசனில் அவரது ஆவரேஜ் 150+. 2021-22 சீசனில் அவருடைய ஆவரேஜ் 120+. 2022-23 சீசனில் அவருடைய ஆவரேஜ் 92. முதல்தர போட்டிகளில் பிராட்மேனின் ஆவரேஜை சர்ப்ராஸ் நெருங்கிக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு இந்திய அணிக்கான அழைப்பு அந்த 3 ஆண்டுகளில் வரவே இல்லை.

இதற்கு மேலும் சர்ப்ராஸை அணியில் எடுக்காமல் இருந்தால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும் சூழலில்தான் கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தார். 3 அரைசதங்களை அடித்திருந்தார். நல்ல அறிமுகம். ஆனால், தடம் பதிக்கும் அளவுக்கான அறிமுகம் இல்லை. ‘இந்திய அணியில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் இப்படி அரைசதத்தோடு நிறுத்திக் கொள்ளமாட்டேன். கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸை ஆடுவேன்.’ என்று சர்ப்ராஸ் சபதமேற்றிருந்தார்.

அந்தத் தொடருக்குப் பிறகு நேராக கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் கழித்து வங்கதேசத்துக்கு எதிராகத்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியது. அந்த வங்கதேச தொடரில் சர்ப்ராஸூக்கு லெவனில் இடம் கிடைக்கவில்லை. வங்கதேச தொடருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் இடையில் இரானி கோப்பை தொடர் நடந்திருந்தது. அதில் ஆட சென்று அங்கே ஒரு இரட்டைச் சதத்தை அடித்து வந்தார். நியூசிலாந்து தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த முறையும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. டாஸூக்கு சில மணி நேரங்கள் முன்பு வரைக்குமே கூட கம்பீரும் ரோஹித்தும் சர்ப்ராஸை லெவனில் எடுக்கும் மனநிலையில் இல்லை. இந்த சமயத்தில்தான் கில்லுக்கு கழுத்தில் ஒரு அசௌகரியம் ஏற்படுகிறது. அவர் ஆட முடியாத சூழல்.

தேவதை சர்ப்ராஸ் கானை தேடி வருகிறது. லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்கேயும் ஒரு தடங்கல். முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட். உள்ளூரில் இந்திய அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுதான். சர்ப்ராஸ் கானும் டக் அவுட். நியூசிலாந்து 358 ரன்கள் முன்னிலைப் பெறுகிறது. போட்டி இந்தியாவின் கையை விட்டே செல்கிறது. இப்படியொரு இக்கட்டான சூழலில்தான் சர்ப்ராஸ் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அசாத்தியமான ஆட்டத்தை ஆடினார். கவுண்டர் அட்டாக் செய்து நியூசிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பின்னங்காலை பயன்படுத்தி கல்லியிலும் பாயிண்டிலும் அவர் அடித்த ஷாட்கள் அத்தனை அழகாக இருந்தது. இங்கிலாந்து தொடரில் எடுத்த சபதத்தையும் நிறைவேற்றும் வகையில் சதத்தையும் எட்டிவிட்டார்.

Sarfaraz

பெருங்கனவை சுமந்து வாய்ப்புக்காக காத்திருந்த ஒரு இளம் நாயகன் தன்னுடைய முழுமையான திறனையும் வெளிக்காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வான் என்பதை பெங்களூருவில் சர்ப்ராஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவரின் ஆட்டம் நமக்கு சொல்லும் மெசேஜ் இதுதான், ‘வாய்ப்புங்றது தேவதை மாதிரி!’

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.