Srividya: நிறைவேறாத ஆசை, துரோகம்; நோயுடன் போராட்டம்… மனிதத்தை நேசித்த ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

சினிமா… பெரும் கனவுக் கடல். அதில் மூழ்கி முத்தெடுத்தவர்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், அந்தக் கடலின் சுழலில் சிக்கி காணாமல் போனவர்கள் ஏராளம். அவர்களை அடையாளம் காணக் கூட இந்த பரபரப்பு வாழ்க்கையில் நேரம் கிடைப்பதில்லை. அப்படி நம்மால் மறக்கப்பட்ட ஒரு அழகிய ஆன்மாதான் நடிகை ஸ்ரீ வித்யா. அபூர்வராகங்கள் படத்தில் அந்த அகல கண்களை சுழற்றி, நடிகர் கமலிடம், “கேள்வியின் நாயகனே… என் கேள்விக்கு பதில் என்னயா…” எனக் கேட்பார். அந்த கேள்விக்கான பதில் அவரின் மரணத்துக்குப் பிறகுதான் கிடைத்தது. அந்த கேள்வியும் பதிலும் குறித்து பார்ப்பதற்கு முன்பு, அவரின் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவித்யா அம்மாவுடன்

1953-ம் ஆண்டு, சென்னையில் ஜூலை 24-ம் தேதி, நடிகை ஸ்ரீவித்யா பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர் விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி – கர்நாடகப் பாடகி எம்.எல்.வசந்த குமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். ஸ்ரீவித்யா பிறந்த ஒரு வருடத்தில் நடிகர் விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஒரு விபத்தில் சிக்கினார். அதனால், தசையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. குடும்ப பொறுப்பு ஸ்ரீ வித்யாவின் தாயார் எம்.எல்.வசந்த குமாரியின் முதுகில் சவாரி செய்தது. மகன் சங்கர் ராமனையும், மகள் ஸ்ரீ வித்யாவையும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்த்து வந்தார் எம்.எல்.வசந்த குமாரி.

குட்டி பத்மினி வீட்டின் அருகில் குடியிருந்ததால், நடனம், மேக்கப், நடிப்பு என சினிமா துறையில் ஸ்ரீ வித்யாவுக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்துக்கு பலனாக 14 வது வயதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவருட்ச்செல்வன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீவித்யா. அதை தொடர்ந்து ‘பெட்டராஷி பெத்தம்மா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அசாத்திய நடிப்பு, அசத்தல் நடனம், ஈர்க்கும் அழகு காரணமாக ஸ்ரீவித்யாவை இயக்குநர் கே.பாலச்சந்தர் அடையாளம் கண்டார். அதன் பலனாக, 1971-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான ’நூறுக்கு நூறு’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீவித்யா

நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக தாய்மொழியான தமிழில் கதாநாயகியாக ஸ்ரீவித்யா அறிமுகமான முதல் படம் ’டெல்லி டு மெட்ராஸ்’. இப்படம் 1972-ம் ஆண்டு ரிலீஸானது. பின், இயக்குநர் கே.பாலச்சந்தரின் அடுத்தடுத்த படங்களில் தொடந்து நடிக்கத் தொடங்கினார். “அபூர்வ ராகங்கள்’’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் – ரஜினியுடனும் சேர்ந்து நடித்து புகழ்பெற்றார். இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, இதையடுத்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே நடிகை ஸ்ரீவித்யா தான் கதாநாயகியாக நடித்தார்.

நடிகர் கமல் ஹாசனும், ஸ்ரீ வித்யாவும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அவர்களின் தொடர் திரைப் பயணத்தின் விளைவால், வாழ்க்கை முழுவதும் பயணிக்க திட்டமிட்டனர். ஸ்ரீவித்யா, கமல் ஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் அதுதான் திரை வாழ்வின் ஆரம்பம். அதனால், காதலால் தொழில்துறை கேட்டுவிடும் என இருவருக்கும் உபதேசித்து ஸ்ரீவித்யாவின் தாய் இவர்களின் காதலை எதிர்த்தார். இதில் கோபப்பட்ட நடிகர் கமல் தங்களது காதலை முறித்துக் கொண்டார். அதற்குப் பிறகு சுமார் 10 வருடங்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. அந்த நேரத்தில் நடிகர் கமல் ஹாசன் திருமணமும் செய்துகொண்டார்.

ஸ்ரீவித்யா – கமல்

ஸ்ரீ வித்யாவின் கவனம் மலையாள திரையுலகை நோக்கி நகர்ந்தார். 1969-ல் ‘குமார சம்பவம்’ படத்தின் மேனகா கதாபாத்திரத்துக்குப்பின், ‘சட்டம்பிக்கவலா’ என்னும் மலையாளப்படத்தில் முதல்முறையாக கதாநாயகி அந்தஸ்தைப் பெற்றார். பின் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் படங்களில் மாறி மாறி நடித்து பரபரப்பாக இயங்கி வந்தார். மலையாளத்தில் டப்பிங் பேசுவதற்காக மலையாளம் எழுதப் படிக்கக் கூட கற்றார். ஆனால், அவர் மனதில் குடும்பம், குழந்தை என வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது.

குடும்ப வாழ்க்கை ஆசையை நிறைவேற்றும் விதமாக 1978-ல் மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்காக, குடும்பத்தாரை எதிர்த்தார். கிறிஸ்தவ மதம் கூட மாறினார். ஆனால், திருமணத்திற்கு பிறகு இவரது வாழக்கை தலைகீழானது. நிதிச் சிக்கலால் கணவனின் வற்புறுத்தலின் பெயரில் மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பணத்துக்காகதான் ஜார்ஜ் தாமஸ் அவரை திருமணம் செய்துகொண்டதும், போலி கையெழுத்து போட்டு, ஸ்ரீவித்யாவின் சொத்துகளை அபகரித்து பயன்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது. இதன் காரணமாக திருமண வாழ்வில் ஏற்பட்ட விரிசலால் 1980-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

கணவருடன் ஸ்ரீவித்யா

சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர், மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தளபதி படத்தில் ரஜினிக்கும், ஆனந்தம் படத்தில் மம்முட்டிக்கும், கண்ணுக்குள் நிலவு படத்தில் விஜய்க்கும் அம்மாவாகவும், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். தன் விவாகரத்துக்குப் பின்,8 வருடங்கள் கழித்து கமலுடன் பேசினார். அதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்த இந்திரன் சந்திரன், நம்மவர், காதலா காதலா ஆகியப் படங்களில் ஸ்ரீவித்யா பணிபுரிந்திருக்கிறார்.

ஸ்ரீ வித்யாவுக்கு இசைப் பள்ளி தொடங்க வேண்டும் என ஆசை இருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினார். அப்போதுதான் அவர் வாழ்வில் அடுத்த இடியாக வந்து இறங்கியது முதுகெலும்பு, மார்பில் புற்றுநோய். அதற்காக திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் திரையுலகைச் சார்ந்த யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் அவர் மனதில் தனக்கென ஒரு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. மரணமாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, நடிகர் கமல் ஹாசனை மட்டும் சந்திக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஸ்ரீவித்யா பற்றி அறிந்த கமல்ஹாசன், திருவனந்தபுரம் சென்று நடிகை ஸ்ரீவித்யாவை சந்தித்தார். அழகு ஓவியமாக இருந்த ஸ்ரீ வித்யா, புற்றுநோய்க்கு உடலை தின்னக் கொடுத்துவிட்டு, முடி இழந்து பார்ப்போர் மனதை கலங்க வைத்தார்.

ஸ்ரீவித்யா

2006-ம் ஆண்டு அக்டோபர் 19 (இதே நாள்) தனது 53வயதில் மாலை 7:45 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது கேரள அரசு ஸ்ரீவித்யாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி கெளரவித்தது. ஆனால் அவரின் மரணத்துக்கு பிறகு ஒரு செய்தி வெளியானது அதுதான் ஸ்ரீவித்யா எழுதிய இறுதி உயில். அதில், “திறமையான மாணவர்களுக்கு இசை மற்றும் நடனப்பள்ளியைத் தொடங்கவும், வறுமையில் படிக்கும் மாணவர்களுக்கு உதவவும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி வழங்கவும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் பணிகளை செய்ய நடிகர் கே.பி.கணேஷ் குமாரை கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது மறைவுக்குப் பின், என் சகோதரரின் குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும், என்னைப் பார்த்துக்கொண்ட வேலையாட்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்” என எழுதியிருந்தது பலரையும் கலங்க வைத்தது.

அபூர்வராகங்கள் படத்தில் அந்த அகல கண்களை சுழற்றி, நடிகர் கமலிடம் “கேள்வியின் நாயகனே… என் கேள்விக்கு பதில் என்னயா…” எனக் கேட்டாரே, அந்த கேள்விக்கான பதிலை நடிகர் கமல் ஹாசன் ஒரு பேட்டியில், “நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிச்சேன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அவங்க எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும்தான் அதில் எந்த சந்தேகமும் இல்ல. அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடியனும் என்றெல்லாம் அவசியம் இல்லை” என ஸ்ரீ வித்யாவின் நிறைவேறாத காதலை நினைத்து உருகியிருப்பார்.

கமல்ஹாசன்

கைக் கூடாதா காதல், மகிழ்ச்சி இல்லாத திருமண வாழ்க்கை, சுற்றிலும் நடந்த துரோகம், கடைசிவரை தனிமை, மரணம் வரை நோயுடன் போராட்டம் இத்தனைக்குப் பிறகும், தன் சொத்துகளை இந்த சமுகத்துக்கே கொடுத்து சென்றிருக்கிறார் ஸ்ரீ வித்யா என்றால், அவர் மனிதத்தை எவ்வளவு நேசித்திருப்பார்… அவரின் நினைவு தினமான இன்று அவரின் ஆன்மாவுக்கு நினைவஞ்சலி!

அவர் நடித்த படங்களில் நீங்கள் சிலகித்த ஒரு கட்சியை கமெண்டில் சொல்லுங்களேன்…

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.