புதுடெல்லி: ஏர் இந்தியா, இண்டிகோ உட்பட ஞாயிற்றுக்கிழமையும் இந்தியாவின் 20-க்கும் அதிமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் ஆகிய விமான நிறுவனங்களின் வெளிநாட்டு விமானங்கள் உள்ளிட்டவைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் தலா ஆறு விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இண்டிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெத்தா – மும்பை, கோழிக்கோடு – தம்மம், டெல்லி – இஸ்தான்புல், மும்பை – இஸ்தான்புல், புனே – ஜோத்பூர் மற்றும் கோவா – அகமதாபாத் ஆகிய விமானங்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி – பிராங்ஃப்ர்ட், சிங்கபூர் – மும்பை , பாலி – டெல்லி, சிங்கப்பூர் – டெல்லி, சிங்கப்பூர் – பூனே, மும்பை – சிங்கப்பூர் ஆகிய ஆறு விமானங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நெறிமுறைகளின் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு வழிமுறைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஸா ஏர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நிறுவனத்தின் சில விமானங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவசர கால பதிலளிக்கும் குழுக்கள் நிலைமையை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஏர் இந்தியாவின் ஆறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்திடமிருந்து உடனடியாக இதுகுறித்து எந்த தகவலும் வரவில்லை. இந்த வாரத்தில் 90க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவைகளில் பெரும்பாலானவை புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.