புதுடெல்லி: கணவன் மார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி இந்து பெண்கள் கொண்டாடும் ‘கர்வா சவுத்’ பண்டிகையின் போது இந்த ஆண்டு ரூ.22 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மணமான இந்து பெண்கள் விரதமிருந்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கர்வா சவுத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாகப் பண்டிகையின் போது பூஜை பொருட்கள், உடைகள், நகைகள், குறிப்பாக சிவப்பு நிறத்தில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் வளையல்கள், பழங்கள், உலர் பழங்கள் என பெரும்பாலான பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெறும்.
அத்துடன், கை, கால்களில் மெகந்தி போட்டுக் கொள்வதும் தனி வர்த்தகமாக மாறி உள்ளது. இது போல் கடந்த 2023-ம் ஆண்டு கர்வா சவுத் பண்டிகையின் போது ரூ.15 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டு ரூ.22 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் டெல்லியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகும் என்று தெரிகிறது. இதன் மூலம் நாட்டில் பொருளாதார நடவடிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, டெல்லி சாந் தினி சவுக் மக்களவை தொகுதி பாஜக எம்.பி. பிரவீன் கந்தே வோல் கூறும்போது, “பண்டிகை காலங்களில் வர்த்தக நடவடிக்கை கள் வழக்கமாக அதிகரிக்கும். அதேவேளையில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த ஆண்டு கர்வா சவுத் பண்டிகையில் நுகர்வோர்களின் வாங்கும் போக்கு அதிகரிக்கும்” என்றார்.
கர்வா சவுத் பண்டிகை பெண்கள் கொண்டாடுவதாக இருந்தாலும், சமீப ஆண்டுகளாக மனைவிமார்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கேற்கின்றனர். அதனால், அவர்களும் புதிய உடை உட்பட அவர்களுக்குத் தேவையான பொருட்களை இந்த பண்டிகையின் போது வாங்குகின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.