காஷ்மீர் மாரத்தான்: பயிற்சி எதுவும் இன்றி 21 கி.மீ. ஓடிய முதல்-மந்திரி உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் அவர் அரை மாரத்தானில் பங்கேற்றார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி வரலாற்று சாதனை படைத்தார்.

இந்த சாதனையை அடைந்தது பெருமை அளிப்பதாக கூறிய அவர், இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடவில்லை என்றும் கூறினார்.

முதல்-மந்திரி உமர் அப்துல்லா மாரத்தானில் பங்கேற்று ஓடும்போது, அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர்.

இதுதொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

“மாரத்தானில் மற்றவர்களுடன் ஓடுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வழியில் நிறைய செல்பிகள், வீடியோக்கள் எடுத்தனர். என்னை சந்திப்பதற்கான சில கோரிக்கைகள், வேலை தொடர்பான சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. சில செய்தியாளர்கள் ஓடிக்கொண்டே பேட்டி எடுக்கவும் முயன்றனர்.

மகிழ்ச்சியாக இருக்கவோ, மன அழுத்தத்தை வெல்லவோ உங்களுக்கு போதைப்பொருட்கள் தேவையில்லை. ஒரு கிலோ மீட்டர் ஓடுவதோ அல்லது மாரத்தானில் பங்கேற்று ஓடுவதோ நல்லது. இயற்கையான மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அடைய இது போதும். முயற்சி செய்யுங்கள், போதைப்பொருள் இல்லாத ஜம்மு காஷ்மீருக்காக ஓடத் தொடங்குவோம்” என உமர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.