சென்னை: தமிழக பாஜகவில் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கான நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா நியமனம் செய்துள்ளார்.
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும்.அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் உறுப்பினர் சேர்ப்புக்கானஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு நாடு முழுவதும்பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நவம்பர் மாதத்துக்குப் பிறகு, உட்கட்சித் தேர்தல்கள் தொடங்கவுள்ளன. அந்த வகையில் கிளைத்தலைவர், மண்டல் தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறுபதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான அமைப்பு தேர்தல் பணிகளை பாஜக தலைமை துரிதப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கான நிர்வாகிகளை, பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா நியமனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாஜக அமைப்பு தேர்தலை நடத்த தேசிய தலைமை ஒப்புதலுடன், மாநில தேர்தல் அதிகாரியாக கட்சியின் துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி நியமனம் செய்யப்படுகிறார். இணை அதிகாரிகளாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார், மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்யாசுந்தர், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.