தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி.மு.க, தனது இளைஞர் அணி மாநாட்டை கடந்த ஆண்டு நடத்தி காண்பித்தது. அதேபோல சேலத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியே, சேலத்தின் அருமை பெருமையைப் பேசிவிட்டுச் சென்றார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல், கொங்கு மண்டலத்தை தி.மு.க தன்வசப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இதில், புதிதாக அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்தமுடிவு செய்துள்ளார்.
அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கக்கூடிய மாநாட்டுக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அம்மம்பாளையத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடத்தினார். அதிலும், `நம்ம டார்கெட் கொங்கு மண்டலம்தான்’ என்று கூறி, நிர்வாகிகளிடம், `மாநாட்டுக்கு கொங்கு மண்டலத்திலிருந்து பெருந்திரள் கூட்டம் வர வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்தான் சேலத்திற்கு இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாநகர பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நேரு அரங்கத்திற்கு காலை வருகை புரிந்திருந்தார். துணை முதல்வராகி முதன்முறையாக சேலம் வருவதால், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், சட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் விடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சி நடைபெற்றுவந்த நேரு அரங்கம் அருகே த.வெ.க கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் வட்டமிட்டபடி, துணை முதல்வர் கான்வாய் செல்லக்கூடிய நான்கு ரோடு பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையும் சத்தமிட்டுக்கொண்டு கொடியை அசைத்துக் காட்டி ஆரவாரத்துடன் வந்தனர். இதனால் அமைச்சர் நிகழ்ச்சிகளுக்காக வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் பேசியபோது, “துணை முதல்வர் வருகையால் ப்ரோட்டோகால் அடிப்படையில்தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் த.வெ.க கட்சியினர் அனுமதி எதுவும் பெறாமல் துணை முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சத்தமிட்டுச் சுற்றிவந்தது, அரசியலுக்காக வேண்டுமென்றே செய்தது போன்று தெரியவருகிறது. இதற்கு காவல்துறை சார்பில் எந்த அனுமதியும் அவர்கள் பெறவில்லை. எனவே, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.