நாகர்கோவில்: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக தடுப்பு சுவர் சிதைந்துள்ள நிலையில், துறைமுகப் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரை அருகே முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, ஹெலன்நகர், மிடாலம் போன்ற கிராமங்களும், மறுபகுதியில் இரவிபுத்தன் துறை, தூத்தூர், வள்ள விளை ஆகிய கடற்கரை கிராமங்களும் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் ராட்சச அலைகள் எழும் போதும் கடற்கரை கிராமங்கள் இருக்கக்கூடிய வீடுகளை இழுத்துச் செல்வதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதும் வழக்கமாக நிகழ்ந்து வந்தது.
இந்நிலையில் தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவ மக்கள் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் கொச்சி விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதை தொடர்ந்து தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்று தேங்காபட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து 2008ம் ஆண்டு துறைமுகப் பணியை துவக்கியது.
அதன்படி முதல் கட்டமாக 40 கோடி, இரண்டாவது கட்டமாக நூறு கோடி, மூன்றாவது கட்டமாக 261கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த துறைமுக பணி நடைபெற்று வருகிறது. கடலில் உள்பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. இந்த தூண்டில் வளைவுகளை ஒழுங்காக அமைக்காததால் கடலில் ராட்சஸ அலை எழும்பும்போது இந்த தூண்டில் வளைவுகள் இழுத்துச் செல்லப்படுவது வாடிக்கையாக நடந்து வந்தது. கோர்லாக் கற்கள் ஒழுங்காக போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மீனவர்கள் கூறிவந்தனர்.
மேலும் முகத்துவார பகுதிகள் குறுகலாக அமைந்ததால் மீன் பிடிக்க செல்லும் படகுகள் அலையில் சிக்கியதில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து முகத்துவாரத்தை அகலப்படுத்தி மீன்பிடித் துறைமுகத்தை சரியான விதத்தில் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறுக்கட்டமைப்பு பணிகள் நடந்து வந்த போது கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் போடப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் கடந்த 15 ,16 ம் தேதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 2016 ம் ஆண்டில் போடப்பட்ட 100 மீட்டர் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் தற்பொழுது மீன்பிடிதுறைமுக பணி முடங்கியுள்ளது. சேதமடைந்த பகுதியை ராஜேஷ்குமார் எம்எல்ஏ, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜெரோம், மற்றும் மீனவ பிரதிநிகள் பார்வையிட்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறுகையில், “மீன்பிடித் துறைமுகப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதனுடைய தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். தரம் குறைந்து இருப்பதால்தான் சிறிய கடல் அலைக்கு கூட இது தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு முகத்துவாரங்களும் தூண்டில் வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. குளச்சலில் தனியார் கட்டிய துறைமுகத்திற்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆகவே இதை அரசு ஆராய்ந்து சரியான முறையில் தரமாக மீன்பிடி துறைமுகம் கட்ட வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு கடல் அலைக்கும் தடுப்புச் சுவர் சேதமடைவது தொடர் கதையாக நடந்து வரும். அரசினுடைய பணம் வீணாகப் போகும் சூழ்நிலை உள்ளது. ஆகவே இனியாவது மீன்பிடித் துறைமுகப் பணியை தரமாக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.