Rohit Sharma Viral Video: ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்து அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருப்பதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (Chennai Super Kings) 5 முறை கோப்பையை வென்ற கேப்டனான தோனி மீண்டும் களமிறங்குவாரா என்பது. மற்றொன்று, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அந்த அணியில் தொடர்வாரா அல்லது வேறு அணிக்கு மாறுவாரா என்பது… இந்த இரண்டும்தான் வரும் மெகா ஏலத்திற்கான எதிர்பார்ப்பை இமயமலை அளவுக்கு உயர்த்தி உள்ளது.
இந்த இரண்டிற்குமான விடை வரும் அக். 31ஆம் தேதியே தெரிந்துவிடும். தோனி (MS Dhoni) சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது எனலாம். இதுகுறித்து தோனி தங்களிடம் எதுவும் இதுவரை பேசவில்லை என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தாலும், நிச்சயம் அவர் அடுத்த சீசனை விளையாடுவார் என்றும் சிஎஸ்கே அவரை Uncapped வீரராக தக்கவைக்கும் என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், ரோஹித் சர்மா (Rohit Sharma) விஷயத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் குழப்பமே நிலவுகிறது.
ரோஹித் மும்பையில் விளையாடுவாரா?
கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து டிரேட் செய்து வாங்கி தங்களின் கேப்டனாக நியமித்தது. இதனால், ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து நீக்கப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் பெரிய விமர்சனத்தை பெற்றது. டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி (Team India) வென்றதும் அந்த அணி மீதான விமர்சனம் இரட்டிப்பானது.
கடந்த நான்கு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறாத நிலையில், இந்த 2025 மெகா ஏலத்தில் நிச்சயம் பலமான அணியை கட்டமைக்க விரும்பும். எனவே, இந்த முறை மும்பை அணி 5 முறை தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்து, இந்தியாவுக்கு தற்போது டி20 உலகக் கோப்பையையும் பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டனாக்குமா, இல்லை ஹர்திக் பாண்டியா உடனே தொடருமா, இரண்டுமே இல்லையெனில் தற்போதைய இந்திய டி20 கேப்டன் சூர்யகுமாரை கேப்டனாக்குமா என்ற கேள்விகள் உள்ளன.
அக். 31 பதில் தெரியும்?
இதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ரோஹித் சர்மா ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர். ரோஹித் பிற அணிகளுக்கு டிரேட் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கான விடையும் அக். 31ஆம் தேதிதான் தெரியும்.
அந்த வகையில், தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி (IND vs NZ 1st Test) விளையாடி வருகிறது. நேற்று மைதானத்தில் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து சென்றபோது ஒரு ரசிகர் ஒருவருடன் அவர் பேசிய ருசிகர வீடியோ (Viral Video) ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு செல்லப்போகிறார் என்பது குறித்து அந்த பேச்சு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பதை இங்கு காணலாம்.
வைரலாகும் வீடியோவில் இருப்பது என்ன?
மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ரோஹித் நடந்து செல்கையில், மேல்தளத்தில் இருந்து கூச்சலிட்டார். அவர் முதலில்,”ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு விளையாடப்போகிறீர்கள்…?” என கேட்டார். அது ரோஹித் சர்மாவுக்கு சரியாக கேட்கவில்லை. உடனே ரோஹித்,”என்ன…?” என கேட்க அந்த ரசிகர் மீண்டும் தனது கேள்வியை கேட்டார்.
Izzat se bol pic.twitter.com/KHbWvkZYbS
— poetvanity (@PoetVanity__) October 19, 2024
அதற்கு ரோஹித் சர்மா,”எந்த அணி உங்களுக்கு வேண்டும்?” என்றார். உடனே அந்த ரசிகர்,”ஆர்சிபி அணிக்கு வாங்க…” என உரிமையுடன் அழைத்தார். ரோஹித் அதன்பின் அமைதியாக நடந்துசென்றார். ரோஹித் சர்மாவின் இந்த வீடியோதான் தற்போது வைரலாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ரோஹித் சர்மா மும்பையை விட்டு வெளியேறுவது உறுதி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு என்பதால் மைதானம் முழுவதும் ஆர்சிபி வீரர்கள் நிரம்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.