பாகிஸ்தான்: இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்; விரிவுரையாளர் கைது

பஞ்சாப்,

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கல்விக்கான துறையின் விரிவுரையாளர் பணியை மேற்கொண்டு வருபவர் நதீம் அகமது. இவர் மீது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுபற்றி எக்ஸ்பிரஸ் டிரிபியூனில் வெளியான செய்தியில், பஹவல்நகர் பகுதியில் உள்ள சிட்டி பி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புகாரில், மாணவிக்கு அகமது ஆபாச வீடியோக்களை அனுப்பி துன்புறுத்தி உள்ளார். அகமதுவின் அலுவலகத்திற்கு வரும்படி மாணவியை அழைத்திருக்கிறார்.

அந்த மாணவி சென்றபோது, அவரின் கையை பிடித்து இருக்கிறார். தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். இதன்பின்பு, பாடங்களில் தோல்வியடைய செய்து விடுவேன் என்றும், விருப்பத்திற்கு உடன்படாவிட்டால், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படுவாய் என்று மிரட்டியும் இருக்கிறார்.

தொடக்கத்தில், பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பிரிவை அந்த மாணவி அணுகி உள்ளார். ஆனால், இந்த விவகாரம் வெளியே தெரியாமல் மறைக்கும் முயற்சியில் நிர்வாகம் முயன்றுள்ளது. சரியான தருணத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து துணிச்சலாக அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதன்பின் அகமதுவை போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, துணை வேந்தரான பேராசிரியர் முகமது கம்ரான், நதீம் அகமதுவை சஸ்பெண்டு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை பற்றிய விசாரணையும் தொடங்கப்பட்டு உள்ளது.

விசாரணை அறிக்கையில் அகமது குற்றவாளி என கண்டறியப்பட்டால், விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் உறுதி தெரிவித்து உள்ளது. கடந்த காலத்தில் அகமது, இதேபோன்று பல மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி பல்கலைக்கழக வளாக இயக்குநரிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தக்க சான்றுகளை கடந்த மார்ச்சில் அளித்துள்ளனர்.

விசாரணை முடிவில் உண்மை தெரிந்ததும், சம்பளமின்றி 3 மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட பின்னர், இந்த விவகாரம் பற்றி நிர்வாகம் அடுத்து எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் விட்டு விட்டது. இதனால், அகமது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்திற்கு எதிராக போதை பொருள் பயன்பாடு மற்றும் மாணவிகளை துன்புறுத்தல் செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் பலரை போலீசார் கைது செய்தனர் என எக்ஸ்பிரஸ் டிரிபியூனில் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.