மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 99 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணைமுதல்வர் தேவிந்திர பட்நாவிஸ் தனது கோட்டையான தென்மேற்கு நாக்பூரில் போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அசோக் சவானின் மகள், ஸ்ரீஜெய சவான் போகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மும்பை பாஜக தலைவர் ஆஷிஸ் சேலார் மேற்கு வந்த்ரே தொகுதியிலும், கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான நாராயண் ரானேவின் மகன் நிதிஸ் ரானே தான் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கன்கவ்லியில் போட்டியிருகிறார்.
மாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் நவம்பர் 23 தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை மகாயுதி கூட்டணியில் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. இந்தத் தேர்தலில் பாஜக 150 தொதிகளில் போட்டியிடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ்தாக்கரே – ஏக்நாத் ஷிண்டே ஒன்றிணைந்து) 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. அதேபோல் 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இதனிடையே, 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்ட ணி 48 இடங்களில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) 30 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.