புதுடெல்லி: சுகாதாரம், வேளாண், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீடித்த நகர உருவாக்கம் ஆகிய துறைகளை மையப்படுத்தி, டெல்லியில் 3 ஏஐ சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் ரூ.990 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஏஐ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் சர்வதேச அளவில் இந்தியாவை வலுவான நாடாக மாற்ற இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த சிறப்பு மையங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மக்களின் மேம்பாட்டுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஏஐ சிறப்பு மையங்கள் உறுதுணையாக இருக்கும். அதன் மூலம் நவீன வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று தெரிவித்தார். இந்த மையங்கள் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். இந்த ஏஐ சிறப்பு மையங்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தலைமையின் கீழ் தொழில் துறை தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்போடு செயல்படும்.
சுகாதாரத் துறை சார்ந்த ஏஐ சிறப்பு மையத்துக்கு எய்ம்ஸ் மற்றும் டெல்லியும், வேளாண் துறைக்கான ஏஐ சிறப்பு மையத்துக்கு ஐஐடி ரோபாரும். நீடித்த நகரத் திட்டங்கள் தொடர்பாக ஏஐ சிறப்பு மையத்துக்கு ஐஐடி கான்பூரும் தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ சிறப்பு மையங்கள் அமைக்கப்படுவதை மேற்பார்வை செய்ய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துணைத் தலைவராக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிற நிலையில், அந்த இலக்கை அடைவதில் ஏஐ சிறப்பு மையங்கள் முக்கிய பங்காற்றும்.