India vs New Zealand Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த அக். 16ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மழையால் முழுவதும் ரத்தானது. இரண்டாவது நாளில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய, அன்றே வெறும் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.
46 ரன்களுக்கு ஆல்-அவுட்
மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்தனர். அதில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 20 ரன்களை எடுத்தார். அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் எடுத்தனர். குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்று, அடுத்து பந்துவீச வந்தது. ஆனால், இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். ஜெய்ஸ்வால் 35, ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினர். அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் கான் – ரிஷப் பண்ட் ஜோடி 177 ரன்களை குவித்து, இரண்டாம் இன்னிங்ஸில் முன்னிலை பெற தொடங்கியது.
புதிய பந்தில் வீழ்ந்த இந்தியா
80 ஓவர்கள் இந்தியா பேட்டிங் செய்த உடன் புதிய பந்தை நியூசிலாந்து அணி பெற்றது. அதன்பிறகே இந்திய அணிக்கு வினை தொடங்கியது. சர்ஃபராஸ் கான் 150 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 99 ரன்களுக்கும் அவுட்டாக அடுத்த வந்தவர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். கேஎல் ராகுல் 12, ஜடேஜா 5, அஸ்வின் 15, சிராஜ் 0 என ஆட்டமிழக்க குல்தீப் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹென்றி மற்றும் ரூர்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 462 ரன்களை குவித்து இந்திய அணி 107 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்து.
நியூசிலாந்துக்கு வரலாற்று வெற்றி
இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து நியூசிலாந்து அணி 27.4 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது. வில் யங் 48 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மட்டும் இன்று 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து அணிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது.
கடைசியாக 1988ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தற்போது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து இந்தியாவில் வென்றுள்ளது. குறிப்பாக மொத்தமாகவே மூன்று டெஸ்ட் போட்டிகளை மட்டுமே நியூசிலாந்து அணி இந்தியாவில் வென்றுள்ளது. தற்போதும், 1988ஆம் ஆண்டும் மட்டுமின்றி 1969ஆம் ஆண்டிலும் நியூசிலாந்து அணி நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.