நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் விளாசியது. சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவிந்திரா 134 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி, லீடிங் 356 என்ற இமாலய இலக்குடன் போராட வேண்டியிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில், சப்ராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள் விளாச 462 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. 3 விக்கெட் மட்டுமே இழந்து போட்டியைக் கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்திருந்த ரச்சின் ரவிந்திரா ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். போட்டிக்கு பிறகான பேட்டியில் ரச்சின், “இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய ஃபார்மும் தயாரிப்புகளும் சரியாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கும் வரை, எனக்கு என் திட்டம் என்னவென்று தெரியும். அனைத்தும் சிறப்பாக செல்லும்” என்றார்.
இந்த போட்டியில் கையாண்ட பேட்டிங் ஸ்டைல் குறித்து, “முன் பின் நகர்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. அட்டாக் செய்ய நினைக்கவில்லை, அதை விட நிலையாக நிற்க வேண்டியது அவசியமாக இருந்தது. அடித்து விளையாட நினைக்கவில்லை, சரியான பொசிஷனில் இருந்தேன். அதனாலேயே என்னால் ஸ்கோர் செய்ய முடிந்தது.
நான் நகர்ந்த விதம் என்னை பல இடங்களில் ரன் அடிக்க வைத்தது. எப்போதும் பௌண்டரி பெற வேண்டும் என்பதில்லை. அணியில் பேசியபடி, ஸ்ட்ரைக் ரொடேட் செய்தோம். நாங்கள் நம்பியபடி, லெஃப்ட்-ரைட் காம்பினேஷன் அவர்களை சோர்வாக்கியிருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
போட்டிகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற சி.எஸ்.கே வீரர் ரச்சின், “தொடர்ந்து 6 போட்டிகள் வரும்போது நாம் எக்ஸ்ட்ராவாக எதாவது செய்ய வேண்டும். வீட்டுக்குள்ளோ அல்லது வெளியிலோ பயிற்சி எடுக்க வேண்டும். அது எல்லாமே இன்று பலனளித்தது.
சென்னையில் கருமண், செம்மண் என வித்தியாசமான பிட்ச்களில் பயிற்சி எடுத்தேன். பல பௌலர்களுடன் நெட்ஸில் பயிற்சி செய்து என் னமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனப் பார்த்தேன். எல்லா நாட்களும் பயிற்சி செய்தேன். அது மிக முக்கியமான அனுபவம்.” என்று சென்னைக்கு நன்றி கடனுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.