புதுடெல்லி: இந்தியாவின் கனவுகள், நனவாகும்வரை ஓய்வெடுக்க மாட்டேன் என்றுபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
என்டிடிவி ஊடகம் சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தற்போது உலகம்முழுவதும் குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழலில் உலகத்தின்நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியாஉருவெடுத்திருக்கிறது. இதுஇந்தியாவின் நூற்றாண்டு ஆகும்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறை ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற 125 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. குறு, சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.21,000 கோடி நிதியுதவி செலுத்தப்பட்டு உள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
5 லட்சம் வீடுகளில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அம்மாவின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 90கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. 12 பிரம்மாண்ட தொழிற்பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. செமிகண்டக்டர், மரபுசாரா எரிசக்தி, விமான போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
என்னிடம் சிலர் ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர். மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்து புதிய சாதனை படைத்து விட்டீர்கள். உங்களது ஆட்சியில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பல்வேறு சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல் செய்து விட்டீர்கள். இனிமேலும் நீங்கள் ஏன் கடினமாக உழைக்க வேண்டும் என்று என்னிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த சாதனைகள் போதாது. இன்னும் நிறைய சாதிக்கவேண்டும். நமது லட்சிய கனவுகளை எட்ட வேண்டும். இந்தியாவின் லட்சிய கனவுகள், நனவாகும்வரை ஓய்வெடுக்க மாட்டேன்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. 16 கோடி பேருக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. 350மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 15-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் 8 கோடி இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளனர்.இந்த சாதனைகள் போதாது. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். இந்த லட்சியத்தில் 140 கோடி இந்தியர்களும் இணைந்து உள்ளனர். இந்தியாவின் சாதனைகளில் உலகம் பெருமிதம் கொள்கிறது.உலகின் பல்வேறு சவால்களுக்கு, பிரச்சினைகளுக்கு இந்தியா மிக எளிய முறையில் தீர்வுகளை வழங்கி வருகிறது. அண்மையில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் திட்டங்களை பின்பற்ற உலக நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன.
இந்தியா வளர்ச்சி அடையும்போது ஒட்டுமொத்த உலகமும் பலன் அடைகிறது. இந்தியாவின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கான வெற்றி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.