கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்த நவீன் பாபு, கண்ணூர் மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி மஞ்சுஷா பத்தனம்திட்டா கோனி தாசில்தாராக பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நவீன் பாபுவும், அவரது மனைவி மஞ்சுஷாவும் சி.பி.எம் பணியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் சொந்த ஊரான பத்தனம்திட்டாவுக்கு பணியிடமாறுதல் கேட்டுப்பெற்றார் நவீன் பாபு. பணியிடமாறுதலாகிச் செல்லும் நவீன் பாபு-வை வழியனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கண்ணூர் கலெக்டர் அலுவலக மினி மீட்டிங் ஹாலில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக கலந்துகொண்ட சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா, சப் கலெக்டர் நவீன் பாபு ஒரு பெட்ரோல் பம்ப்-க்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.
இதனால் மனம் உடைந்த நவீன்பாபு அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு தனது அரசு குடியிருப்புக்குச் சென்றநிலையில், கடந்த 15-ம் தேதி காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதற்கு முன்பு எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத சப் கலெக்டர் மீது லஞ்சம் குற்றச்சாட்டு கூறிய மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா-வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், அந்த பெட்ரோல் பம்ப் திவ்யாவின் கணவரின் பினாமி பெயரில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திவ்யா-வுக்கு எதிராகவும், நவீன் பாபு-வுக்கு ஆதரவாகவும் பத்தனம்திட்ட சி.பி.எம் நிர்வாகிகள் குரல்கொடுத்துள்ளனர். நவீன் பாபு நல்ல அதிகாரி எனவும். இந்த சம்பவம்குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து விலகும்படி திவ்யாவுக்கு சி.பி.எம் தலைமை கூறியுள்ளது. மேலும், திவ்யா மீது போலீஸ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. இதற்கிடையே, பெட்ரோல் பம்ப்-க்கு தடையில்லா சான்றுக்காக சப் கலெக்டர் 98,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்த பிரசாந்திடம் விஜிலென்ஸ் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களையோ. வங்கியில் இருந்து பணம் எடுத்ததற்கான ஆதரங்களையோ பிரசாந்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.