புதுடெல்லி: டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்துக்கு காலிஸ்தான் ஆதரவு குழு ஒன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், அதுகுறித்து டெல்லி போலீஸார் டெலிகிராம் செயலி நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விகாரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மர்மமான பொருள் வெடித்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பள்ளிச்சுவர், அதன் அருகில் உள்ள கடை மற்றும் வாகனம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் டெல்லி போலீஸார் அந்தப் பகுதியை சீல் வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்திய முகவர்கள் குறிவைத்து தாக்குவதற்கு பதிலடியாக இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக டெலிகிராம் செய்தியில் கூறப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இதில் உள்ள காலிஸ்தான் தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். ‘ஜஸ்டீஸ் லீக் இந்தியா’ என்ற டெலிகிராம் சேனலைப் பற்றிய விவரங்களைக் கோரியுள்ளதாக விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் சேனலில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாட்டர் மார்க்குடன், வெடிப்புச் சம்பவம் குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. அந்தச் செய்தியில், “இந்தியாவின் கோழை ஏஜென்சிகளும் அவர்களின் எஜமானர்களும் குண்டர்களை அமர்த்தி எங்கள் உறுப்பினர்களின் குரல்களை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்க்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம், எந்த நேரத்திலும் தாக்கும் திறனுடன் இருக்கிறோாம் என்பதை அவர்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. #காலிஸ்தான் ஜிந்தாபாத், #ஜெஎல்ஐ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரிவினைவாத காலிஸ்தான் தீவிரவாதிகளின் உலகளாவிய இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை, குறிப்பாக கனடாவுனான உறவில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் போக்கு பின்னணியைக் குறிப்பிடுவது போல் இந்தப் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.