டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும்பையில் டேட்டிங் ஆப் மூலம் நூதன மோசடி நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டேட்டிங் ஆப் மூலம் பழகும் ஆண்களை பெண்கள் பிரபலமான கிளப் அல்லது பீர் பார்களுக்கு அழைத்துச்சென்று கடுமையான செலவு வைப்பார்கள். அதாவது அதிக விலையுள்ள உணவுவை வாங்கிச்சாப்பிடுவார்கள். மதுவை அருந்துவார்கள். அழைத்து வரும் வாலிபருக்கு லட்சக்கணக்கில் செலவு வைத்துவிட்டு இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இது போன்ற மோசடி மும்பையில் சமீபத்தில் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. பணம் கொடுக்க முடியாமல் சிலர் கிளப் ஊழியர்களிடம் அடிபட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை பாங்குர் நகர் போலீஸார் அது போன்ற மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் டெல்லியைச் சேர்ந்த அங்குர் மீனா என்பவரை போலீஸார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
மீனா டெல்லி போன்ற மற்ற மெட்ரோபாலிடன் நகரங்களிலும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், மீனாவும், அவனது ஆள்களும் மும்பையில் உள்ள கிளப் உரிமையாளர்களுடன் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டு இளம்பெண்களை பயன்படுத்தி டேட்டிங் ஆப் மூலம் வாலிபர்களை வலையில் விழ வைக்கின்றனர்.
டேட்டிங் ஆப்பில் அறிமுகமாகும் நபரை ஓரிரு நாளிலேயே நேரில் சந்திக்கவேண்டும் என்று கூறி பெண்கள் அழைக்கின்றனர். அப்படி வரும் வாலிபர்களை கிளப் அல்லது பப் அல்லது பீர்பாருக்கு அழைத்துச் சென்று விலையுயர்ந்த உணவு பொருள்கள், மதுபானங்களை வாங்கி சாப்பிட்டு அதிக பில் வரும் வகையில் பார்த்துக்கொள்கின்றனர். குறிப்பிட்ட அளவு பில் வந்தவுடன் பெண்கள் ஏதாவது காரணத்தை சொல்லிவிட்டு தப்பிவிடுகின்றனர். அவர்களுடன் வரும் நபர் பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள மீனாவிடம் விசாரித்த போது கிளப் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
சில கிளப்களுக்கு ஒரே நாளில் 20 லட்சம் வருமானம் வரும் வகையில் இவர்கள் வியாபாரம் கொடுத்துள்ளனர். அதற்கு தக்கபடி மீனா தான் ஏற்பாடு செய்யும் பெண்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கிறார். இதற்காக 15 நாள்களுக்கு ஒரு முறை பெண்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். டெல்லியில் அனுபவம் உள்ள பெண்களை அழைத்து வந்து மும்பையில் உள்ள கிளப் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இம்மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனாவுடன் தொடர்பில் இருந்த பெண்களில் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மீனாவிடமிருந்து விலகி சொந்தமாக கிளப் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மீனா தெரிவித்துள்ளார். அது குறித்து விசாரித்து வருகிறோம்”என்றார்.
மும்பையில் உள்ள காட்பாதர் என்ற கிளப் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்து இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீனாவை தங்களது காவலில் எடுத்து இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb