மும்பை: நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்த ரவுடியை காதல் வலையில் வீழ்த்தி போலீஸார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்தபடியே அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
லாரன்ஸ் பிஷ்னோய், வடமாநிலங்களில் பரவலாக வாழும் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் மான்களின் பாதுகாவலர்களாக செயல்படுகின்றனர். கடந்த 1998-ம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் சல்மான் கான், மான்களை வேட்டையாடினார். இதன் காரணமாக பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ், நடிகர் சல்மான் கானை எதிரியாக பாவித்து வருகிறார்.
கடந்த ஜனவரியில் மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டில் 2 மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரலில் சல்மான் கான் வீட்டின் மீது மர்ம நபர்கள் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சூழலில் சல்மானின் நெருங்கிய நண்பரான மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக புதிதாக ரூ.2 கோடியில் குண்டு துளைக்காத காரை சல்மான் வாங்கி உள்ளார். அதோடு தனியார் நிறுவனம் சார்பில் 60 பேர் அவருக்கு இரவும் பகலும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரது வீட்டில் மும்பை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சுக்பீர் பல்பீர் சிங் என்பவர் மும்பையில் முகாமிட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரை கண்டுபிடிக்க இளம்பெண் ஒருவரை மும்பை போலீஸார் களமிறக்கினர். அந்த பெண் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் நெருங்கினார். பின்னர் சுக்பீர் பல்பீர் சிங்கை நேரடியாக சந்தித்தார். அவரை காதல் வலையில் வீழ்த்தினார். சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஓட்டலுக்கு சுக்பீர் பல்பீர் சிங்கை அந்த பெண் வரவழைத்தார். அவரோடு அவரது கூட்டாளிகள் 4 பேரும் ஓட்டலுக்கு வந்தனர். அனைவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினர். இளம் பெண்ணின் தகவலின்படி ஓட்டலுக்கு விரைந்து சென்ற மும்பை போலீஸார், சுக்பீர் பல்பீர் சிங் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.